(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை எந்தளவிற்குப் பொருத்தமானது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேவேளை இதனுடன் தொடர்புடைய மற்றொரு செயலணியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஆட்சியாளர்களின் சகோதரர் மாத்திரமேயாவார். ஜனநாயக நாடொன்றில் இத்தகைய செயலணிகளில் குடும்ப உறுப்பினர்களை நியமிப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் செயற்திறன் தொடர்பில் ஆராயும் வகையிலான கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர், மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முடக்கப்படல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் 10 மில்லியன் அஸ்ரா செனேகா தடுப்பூசிகளும் 5 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் 13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் 14 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுமாக சுமார் 21 மில்லியன் மக்களுக்கு இரண்டு கட்டத் தடுப்பூசிகளையும் வழங்குவதற்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறையொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அநேகமான நாடுகள் முன்கூட்டியே தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்காகப் பதிவுசெய்தன. எனினும் இலங்கையானது மிகவும் தாமதமாகவே தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான பதிவை மேற்கொண்டது.
அதேவேளை தற்போது தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி மற்றும் ஆடம்பர இலத்திரனியல் உபகரணங்களுக்கான இறக்குமதி தடை செய்யப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆகவே எமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. ஆனால் இந்த நெருக்கடி கொவிட்-19 வைரஸ் பரவலால் மாத்திரம் ஏற்பட்டதல்ல, மாறாக நெருக்கடி அதிகரிப்பதற்கு அது ஓர் காரணமாக அமைந்துள்ளது.
மேலும் எமது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட 'சுவசரிய' அம்யூலன்ஸ் சேவையானது தற்போது பாரியதொரு பங்களிப்பை வழங்கி வருகின்றது. வாரத்தில் 7 நாட்களும், 24 மணித்தியாலமும் தொழிற்படும் சுவசரிய அம்யூலன்ஸ் சேவையின் ஊடாக நாளொன்றுக்கு சுமார் 500 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பயணிக்கின்றார்கள்.
அடுத்ததாக நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இருக்கும் கட்டில்களின் மொத்த எண்ணிக்கை 717 ஆகும்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் சுகாதார சேவையில் ஏற்படும் செலவுகள் 35 சதவீதத்தினால் அதிகரித்த போதிலும், வழமையை விடவும் குறைவாகக் கடந்த வருடத்தில் மொத்த வருமானத்தில் சுகாதார சேவைக்கென 2.4 சதவீதமான நிதியே ஒதுக்கப்பட்டது.
கொவிட்-19 வைரஸ் பரவலைத் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினரால் மாத்திரம் தனித்துக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்பு அவசியமானதாகும்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள துறைசார் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சுகாதாரத்துறை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களை உள்ளடக்கியதாகக் குழுவொன்றை அமைத்திருக்க வேண்டும்.
தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான குழுவொன்றை அமைக்குமாறு நாம் பல மாதங்களாகக் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், கடந்த வாரம் அதனைச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது.
அதேவேளை இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான தலைமைத்துவத்தை வழங்கும் பொறுப்பு இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டமை எந்தளவிற்குப் பொருத்தமானது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதேவேளை இதனுடன் தொடர்புடைய மற்றொரு செயலணியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஆட்சியாளர்களின் சகோதரர் மாத்திரமேயாவார். ஜனநாயக நாடொன்றில் இத்தகைய செயலணிகளில் குடும்ப உறுப்பினர்களை நியமிப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். அத்தகைய நபர்களைப் பாராளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment