அரசியல் அபிலாஷைகள், போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க இடமளிக்காமல் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காண்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் - பந்துல குணவர்தன - News View

Breaking

Friday, July 23, 2021

அரசியல் அபிலாஷைகள், போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க இடமளிக்காமல் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காண்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் - பந்துல குணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரை முன்நிறுத்திய சேவையை உயர்மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கும் அதனூடாக இலங்கையின் இலவசக் கல்வி முறைமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் முடியும். எனவே இது விடயத்தில் அரசியல் அபிலாஷைகள் மற்றும் போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுப்பதற்கு இடமளிக்காமல் ஜனாதிபதியுடனும் கல்வியமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்ததுரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மைக் காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் பாரிய பொருளாதார நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் எமது நாட்டில் அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்டு வரும் சுமுகமான பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வருமானமான 1216 பில்லியன் ரூபாவில் 86 சதவீதமானவை அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் வேதனக் கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் ஏனைய செலவினங்களை ஈடு செய்வதற்கேற்ற போதிய வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் மீது அதிக வரிச் சுமையை சுமத்துவது அல்லது செலவினங்களைக் குறைப்பது அல்லது நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வது போன்ற மாற்று வழிகளைக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஏற்படுவது இயல்பானதாகும்.

எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் போன்ற எந்தவொரு உலகளாவிய நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்காத நிலையிலும் கூட பெருமளவான கடன்களைப் பெற்றமை,எவ்வித ஆராய்வுமின்றி நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்தமை மற்றும் நாட்டு மக்கள் மீது அதிக வரிச் சுமையை சுமத்தியமை போன்ற காரணங்களால் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

அவ்வாறானதொரு நிலையில் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்கு மத்தியிலேற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலும் இயலுமானவரை பொருளாதாரத்தை செயற்திறன் மிக்க வகையில் நிர்வகிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதுடன் பொதுமக்களுக்கு அவசியமான வரிக் குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

இது குறித்து கடந்த காலத்தில் நான் வெளியிட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டு தவறாகப் பொருள்படக்கூடியவாறு சில ஊடகங்களால் வெளியிடப்பட்டன.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் கல்வியமைச்சர் என்ற வகையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆதரவாக செயற்பட்ட அதேவேளை, எப்போதும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு நாம் இடமளிக்கவில்லை.

அதுமாத்திரமன்றி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினையைப் பொறுத்தவரை ஏனைய அரச சேவைகளில் தாக்கம் ஏற்படாத வகையில் அதற்குத் தீர்வு காண்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த வேளையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அச்செயற்பாடுகள் முழுவதுமாகத் தடைப்பட்டன.

ஆசிரியர்களின் சம்பளம் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். அதன் மூலம் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரை முன்நிறுத்திய சேவையை உயர்மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கும் அதனூடாக இலங்கையின் இலவசக் கல்வி முறைமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் முடியும்.

எனவே இது விடயத்தில் அரசியல் அபிலாஷைகள் மற்றும் போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுப்பதற்கு இடமளிக்காமல் ஜனாதிபதியுடனும் கல்வியமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கான தீர்வைக்கண்டடைவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என்றார்.

No comments:

Post a Comment