இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு நாட்டை பாதுகாக்க முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கவே : பாலித ரங்கே பண்பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு நாட்டை பாதுகாக்க முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கவே : பாலித ரங்கே பண்பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம்)

இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு நாட்டை பாதுகாக்க முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கவாகும். அதனால் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் எம்முடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தாய் வீட்டுக்கு வருவதற்கு வெட்கப்பட தேவையில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு, நாளுக்குநாள் பாரியதொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டு செல்கின்றது. எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பாண் விலையும் அதிகரிக்கப் போகின்றது. மக்கள் வாழ்வதற்கு பாரிய போராட்டத்துக்கு செல்ல வேண்டி வரும். 

இந்த நிலைமையை உணர்ந்தே ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் பாராளுமன்றத்துக்கு சென்று உரையாற்றும்போது, நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதென்றால், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மீண்டும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்துக்கு தெரிவித்தார்.

அவ்வாறு இல்லாமல் வெளிநாடுகளிடம் இருந்து அல்லது வங்கிகளிடமிருந்து பாரியளவிலான வட்டிக்கு கடன் பெற்றோ பணம் அச்சிட்டோ நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாது. இன்று டொலரின் பெறுமதி 225 ரூபா வரை அதிகரித்திருக்கின்றது. 

அதனால் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியுமான, தற்போது அரசியலில் இருக்கும் தேசிய மற்றும் ராஜதந்திர ரீதியில் செயற்படக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். இதனை உணர்ந்து கொண்டதனால்தான் வத்தளை நகர சபை தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டு கட்சியை பலப்படுத்த முன்வந்திருக்கின்றனர்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியை கிராம மற்றும் மாவட்ட மட்டத்தில் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதமாகும் போது ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் இருக்கும் ஏனைய கட்சிகளை முந்திக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. 

நாங்கள் எமது கட்சியை பலப்படுத்திக் கொண்டு வேகமாக முன்னுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் ஒரு பக்கத்தால் நாட்டின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் வீழ்ச்சியடைந்து செல்வதில் இருந்து பாதுகாப்பதுடன் நாட்டை வெளிநாட்டு ஆக்கிரமிப்பில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. வெளிநாட்டு ஆக்கரமிப்புகளில் இருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ள முடியுமாக இருப்பதும் ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமாகும் என்றார்.

No comments:

Post a Comment