இந்நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்று பதிவினை மாற்றியமைத்த குமார் சங்கக்கார - மஹேல ஜெயவர்தன - News View

Breaking

Thursday, July 29, 2021

இந்நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்று பதிவினை மாற்றியமைத்த குமார் சங்கக்கார - மஹேல ஜெயவர்தன

2006 ஆம் ஆண்டின் இதே நாளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான குமார் சங்கக்காரவும் மஹேல ஜெயவர்தனவும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்தனர்.

2006 ஜூலை 27 ஆம் திகதி கொழும்பில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான ஜூலை 29 அன்று இவர்கள் இருவரும் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் மூன்றாவது விக்கெட்டுக்காக கூட்டு சேர்ந்து 624 ஓட்டங்களை குவித்தனர்.

விக்கெட் காப்பாளரான குமார் சங்கக்கார 287 ஓட்டங்களை எடுத்தார், அணித் தலைவராக செயற்பட்ட மஹேல ஜெயவர்தன 374 ஓட்டங்களை எடுத்தார்.

இந்த இன்னிங்ஸில் இலங்கையின் முதலிரு விக்கெட்டுக்களும் (சனத் ஜெயசூரியா, உபுல் தரங்க) 14 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் இவர்களில் இணைப்பாட்டம் இறுதியில் இலங்கைக்கு இமாலய ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொடுத்தது.

இலங்கை இறுதியாக 185.1 ஓவர்களை எதிர்கொண்டு 756 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸுக்காக 169 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸுக்காக 434 ஓட்டங்களையும் பெற்றது.

இதனால் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் முத்தையா முரளிதரன் இரு இன்னிங்ஸ் உள்ளடங்கலாக மொத்தம் 10 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜெயவர்தன தேர்வு செய்யப்பட்டார்.

குமார் சங்கக்கார - மஹேல ஜெயவர்தனவின் இந்த சாதனைக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1997 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா - ரோஷன் மகாநாம 576 ஓட்டங்களை குவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment