ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகள் விடுவிக்கப்படுவர் : பசிலின் வருகையின் நன்மையினை ஆறு மாதங்களிற்குள் எதிர்பார்த்துள்ளோம் - சுரேன் இராகவன் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகள் விடுவிக்கப்படுவர் : பசிலின் வருகையின் நன்மையினை ஆறு மாதங்களிற்குள் எதிர்பார்த்துள்ளோம் - சுரேன் இராகவன்

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர சுரேன் இராகவன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (10.07.2021) வவுனியாவில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னி மாவட்டத்தில் பொருளாதார, அரசியல் சமூகப் பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றை கட்சி ரீதியான பிரிவினைகளை பார்த்து, செய்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் போகும்.

தேர்தல் காலத்தி்ல் அரசியல் செய்வது வழக்கமான விடயம். ஆனால் தேர்தலுக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன் .

வன்னி மாவட்ட மக்கள் கொரோனா நோய்த் தாக்கத்தில் குறைந்தளவில் பாதிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. மக்களினுடைய பொறுப்புணர்ச்சியினாலேயே அது நடந்துள்ளதென நம்புகிறேன். அடுத்த வாரம் இந்த மக்களிற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இடம்பெறும். குறிப்பாக வன்னியில் உள்ள குளங்களை திருத்த வேண்டும். கமத்தினூடாக எமது பொருளாதாரம், மற்றும் சமூகம்,வளர்ச்சியடைய இலகுவான வழி அதுவே.

அத்துடன் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் கேந்திரமாக இலங்கை மாறியிருப்பதாக ஐக்கிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக் கொண்டுள்ளது. எமது மக்கள் நோயின்றி நலமாக வாழ வேண்டும் என்று எடுத்த முயற்சியில் சில தடைகள் ஏற்பட்டது உண்மையே. சில பொருளாதார திட்டங்களை ஏற்ப்படுத்தும்போது தடைகள் ஏற்படும்.

இதேவேளை கைதிகள் தொடர்பில் நான் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலை செய்திருக்கிறோம். இதன் பணி மேலும் தொடரும். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருக்கிறோம். அவர்கள் விடுதலை பெற வேண்டும்.

அவர்கள் பிழை செய்திருக்கலாம். அவர்கள் கொண்ட நோக்கத்துடன் அவர்கள் செய்தது அரசுக்கோ அல்லது நீதிக்கோ பிழையாக இருக்கலாம். ஆனால் போர் முடிந்து 11 வருடங்களிற்கு பின்னர் பொது மன்னிப்பு கொடுத்து அவர்கள் வாழ வழிவிடப்பட வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவன் நான்.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய சீர்சிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. காணாமல் போனோருக்கான நிலையம் முழுமையாக இயங்கும் வகையில் தடைகளை நீக்கியிருக்கின்றோம்.

உடைந்த உறவினை வளர்த்தெடுத்து சமாதானத்தின் பாதையில் செல்ல வேண்டும். நியாயமான விடயத்திற்காக இந்த நாட்டை வளர்த்தெடுக்க வேண்டும்.

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருப்பது என்பதனை மறுக்ககூடாது. அதனை மறைப்பதில் ஒரு பலனும் இல்லை. எனவே பசில் மீது இருக்கும் நம்பிக்கை மூலமாக பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவரக்கூடிய திட்டங்களை எடுப்பதற்கான முழுமையான பொறுப்பினை கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் முன்வந்துள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களிற்குள் அவரது வருகையின் நன்மையினை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அவர் செய்வார் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்தியாவில் நரேந்திர மோடி 45 புதிய அமைச்சர்களை நியமித்துள்ளார். எனவே புதிய அமைச்சுக்களை உருவாக்குவதோ அல்லது புதியவருக்கு அமைச்சினை வழங்குவதோ அரசியலில் புதியவிடயமல்ல என்றார்.

No comments:

Post a Comment