பாராளுமன்றம் மீது தொழில்நுட்ப தாக்குதல் : சீனத் தூதுவரை நேரில் அழைத்தது நோர்வே - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

பாராளுமன்றம் மீது தொழில்நுட்ப தாக்குதல் : சீனத் தூதுவரை நேரில் அழைத்தது நோர்வே

நோர்வே பாராளுமன்றத்தின் மீது சீனா தொழில்நுட்ப ரீதியான தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பாக விளக்கம் கோருவதற்கு நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு அந்நாட்டுக்கான சீனாவின் தூதுவரை நேரில் வரவழைத்திருந்தது என்று நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஈனே எரிக்சன் சொரைட் தெரிவித்திருக்கின்றார்.

இந்த ஆண்டின் கடந்த மார்ச் மாதத்தில் ஸ்டோர்டிங் என்று அழைக்கப்படும் நோர்வேயின் பாராளுமன்றத்தினுடைய அனைத்து மின்னஞ்சல் கட்டமைப்புக்களும் திடீரென செயலிழந்திருந்தன. அத்துடன் சில மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டதாகவும் தகவல்கள் காணப்பட்டன.

இவ்வாறு திடீரென நோர்வேயின் பாராளுமன்ற மின்னஞ்சல் பாதுகாப்பு கட்டமைப்பை மீறி அத்துமீறல் நடைபெற்றிருந்தது.

மைக்ரோசொஃப்ட் எக்ஸ்சேஞ்ச் என்ற மென்பொருளில் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் தகர்க்கப்பட்டே அத்துமீறல் நடைபெற்றிருந்தது.

இதனை, நோர்வேயின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான கட்டமைப்பும், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நோர்வே அரசாங்கம் குறித்த விடயம் சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுத்த அதேநேரம், ஆய்வுகளையும் முடுக்கி விட்டிருந்தது. பல்வேறுவகையான இணைய நடவடிக்கைகள் ஊடாக தடயங்கள் பல கிடைக்கப் பெற்றன.

குறிப்பாக பாதுகாப்பு கட்டமைப்புக்களின் சேவைகள் தொடர்பாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு அத்துமீறல்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டன.

குறித்த தடயங்களும், தகவல்களும், சீனாவிலிருந்தே தொழில்நுட்ப ரீதியான தாக்குதலொன்றும், அத்துமீறும் செயற்பாடுகளும் நடைபெற்றிருக்கின்றன என்பதை வலுவாக உறுதிப்படுத்தியிருந்தன என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஈனே எரிக்சன் சொரைடை மேற்கோளிட்டு அறிக்கையொன்று குறிப்பிடடிருந்தது.

“இவ்விதமான தாக்குதலானது மிக முக்கியமானதொரு விடயமாகும். எமது நாட்டின் ஜனநாயக நிறுவனத்தை பாதிக்கும் மிக மோசமான சம்பவமாகும். ஆகவே இந்த விடயத்தில் உரிய பதிலளிப்புக்களை எதிர்பார்த்திருக்கின்றோம். சீனா இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்பதும் எமது நம்பிக்கையாகவுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை சீனா பார்த்துக் கொள்ள வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் சொரைட் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறினார்.

இந்தப் பின்னணியில்தான் நோர்வே வெளிவிவகார அமைச்சுக்கு சீன தூதுவர் அழைக்கப்பட்டார். எனினும், சீன தூதுவர் எவ்விதமான பதிலளித்தார் என்பது இதுவரையில் அறிக்கையிடப்படவில்லை.

அதேநேரம், சீனாவின் வராந்த வெளிவிவகார அமைச்சின் செய்தியாளர் சந்திப்பிலும் இந்த விடயம் சம்பந்தமாக வெளிவிவகார ஊடகப் பேச்சாளர் மௌனம் கலைக்கவில்லை.

இதனால், சீனா விடயத்தினை ஏற்றுக் கொண்டுவிட்டதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகியுள்ளதோடு, நோர்வே இந்த விடயத்தினை மிகவும் தீவிரமாகவே கையாளுகின்றது என்று அதன் உள்ளகத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே நோர்வே தனக்கு நடந்த அநீதி தொடர்பில் நிச்சயமாக நீதி கோரும் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகின்றது. இதனால் நோர்வே, சீன உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல்கள் மேலும் வலுவடையும் ஆபத்துக்களே காணப்படுகின்றன.

இதேவேளை, கடந்த மார்ச் மாதத்தில், சீன ஹக்கர்கள் அவுஸ்திரேலியாவின் மேற்கு பாராளுமன்ற மின்னஞ்சல் வலையமைப்பையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

குறித்த பாராமன்றத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோசொஃப்ட் மென்பொருளை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதலானது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய சைபர் தாக்குதலின் ஒரு பகுதியாகவும் அது அமைந்திருந்தது.

அதுபற்றிய ஆய்வுகளை அவுஸ்திரேலிய முன்னெடுத்து வந்திருந்த நிலையில் கடந்த மார்ச் 4ஆம் திகதி மாநில தேர்தல் பிரசாரத்தின் நடுவில் கண்டறியப்பட்ட இணையவழி சேவைகள் பாதிக்கப்பட்டதாக, கான்பெராவில் உள்ள அவுஸ்திரேலிய இணைய பாதுகாப்பு கண்காணிப்புக் குழு குறிப்பிட்டது. அத்துடன் அதுபற்றிய மீட்புச் செயற்பாடுகளிரும் அக்குழுவே ஈடுபட்டு சீர் செய்திருந்தது.

இதற்கிடையில், மைக்ரோசொஃப்ட் தனது மென்பொருளில் உள்ள குறைபாட்டை பயன்படுத்தி சீன அரசு நிதியளிக்கும் ஹெக்கிங் குழு பல்வேறு அமைப்புகளை குறிவைத்து செயற்பட்டுள்ளமையை கண்டறிந்துள்ளது.

அதுபற்றிய தகவல்களை பாதிப்புக்குள்ளான நாடுகளின் கட்டமைப்புக்களுடனும் தனது சேவை பெறுநர்களிடத்திலும் மைக்ரோசொஃப்ட் பகிர்ந்துள்ளதோடு தனது மென்பொருளில் காணப்படும் குறைபாட்டை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.என்.ஐ.
தமிழில் ஆர்.ராம்

No comments:

Post a Comment