அசௌகரியங்களுக்கு உள்ளாகாதவாறு செயற்படுவது மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளது பொறுப்பு - சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை : நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

அசௌகரியங்களுக்கு உள்ளாகாதவாறு செயற்படுவது மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளது பொறுப்பு - சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை : நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு சில பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாதவாறு செயற்படுவது மக்கள் பிரதிநிதிகளினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் (20) மக்கள் பிரதிநிதிகள், மாகாண ஆளுநர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இங்கு நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன் மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு முக்கியத்துவமளிக்குமாறு நிதி அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார். 

மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு எந்த நிபந்தனைகளுமின்றி அமைச்சு நிதியை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினூடாக மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து நாட்டை முழுமையாக திறப்பதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து செயற்பட்டு வருவதாகவும் விரைவாக நாட்டின் பொருளாதாரத் துறையை செயற்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பசுமை இலங்கையை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு தேவையான 27 விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்தக் கொள்கை திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வகையில் அரசு நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத் திட்டங்களுக்கு நிதி யொதுக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் மூலம் இப்போது 1.2 பில்லியன் வரை நாட்டுக்கு வருமானமாக கிடைத்து வரும் நிலையில் வெளிநாடுகள் கூட எமது தொழில்நுட்பவியலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டுள்ளன. இந்த நிலையில் அத்தகைய வருமான மார்க்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

எதிர்கால பொருளாதார திட்டங்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் வழிவகைகள் தொடர்பில் இங்கு தெளிவுபடுத்திய நிதியமைச்சர் பொருளாதாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதில் எதிர்வரும் ஆறு மாதங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து முதலீடுகளுக்கான வாய்ப்புகளுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தாம் நிதியமைச்சராக பதவியேற்ற பின்னர் ஊழியர் சேமலாப நிதியில் 14 வீத வட்டியை அறவிடப்போவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad