(எம்.மனோசித்ரா)
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை கணிப்பிடுவதற்கு கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ஆய்வு கப்பலான சர்வேக்ஷாக் அதன் ஒரு கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது.
அதற்கமைய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலை சூழ்ந்துள்ள பகுதிகளில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலான சர்வேக்ஷாக் 558 மைல்கள் சைட் ஸ்கான் சோனர் சோதனையை நிறைவு செய்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சிதைவடைந்த கப்பலை சூழவுள்ள மூன்று சதுர மைல் பரப்பிற்குள் சிதைவுகள் காணப்படுவதாக இப்பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட சென்சர்கள் மற்றும் இரு ஆய்வுப் படகுகள் மூலம் மூன்று பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆய்வுகள் முன்னெடுக்க்கப்படுவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்திய கடற்படையின் ஆய்வு கப்பலான சர்வேக்ஷாக் கடந்த ஜூன் 24 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கடற் பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் ஐ.என்.எஸ் சர்வேக்ஷாக் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நாரா), இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் ஒன்றிணைவில் இந்த கூட்டு ஆய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஒபரேஷன்சாகர் ஆரக்ஷா 2 இன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இக்கூட்டு நடவடிக்கை இப்பிராந்தியத்தில் பாதுகாப்பான கடற்பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும் அதேநேரம், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படும் இதுபோன்ற அனர்த்தங்களை தணிப்பதற்கு விரைந்து ஆதரவினை வழங்குவதற்கான இந்தியாவின் அயலவர்களுக்கு முதலிடம் கொள்கையை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment