நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு, யார் மக்களின் பக்கம் நிற்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 21, 2021

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு, யார் மக்களின் பக்கம் நிற்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டிக்கும் வகையில் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு, யார் மக்களின் பக்கம் நிற்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி எரிபொருள் விலையேற்றத்திற்கு ஆதரவாகவும் அமைச்சர் உதய கம்மன்பிலவைப் பாதுகாக்கும் வகையிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதேசங்களுக்கும் சென்று, அவர்களது தேசத்துரோக செயல் தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை இன்றைய தினத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட 'எதிரணியிலிருந்து சுவாசம்' என்ற செயற்திட்டத்திற்கு சமாந்தரமாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 'ஜன சுவய' என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதன் ஓரங்கமாக 23 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளர்களுக்கான டயலிஸிஸ் இயந்திரம் உள்ளிட்ட அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியநிபுணர் எம்.உமாஷங்கரிடம் கையளிக்கப்பட்டன.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வட மாகாணம் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் காணப்படும் அத்தியாவசிய உபகரணங்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே எம்மாலான இத்தகைய உதவிகளை வழங்கி வருகின்றோம்.
'நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றார்கள். குறிப்பாக எரிபொருள் விலையேற்றத்தினால் அவர்கள் மிகுந்த சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனைக் கண்டித்து கொண்டு வரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு யார் மக்களின் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

அதுமாத்திரமன்றி எரிபொருள் விலையேற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தேசப்பற்றாளர்களா ? அல்லது எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து உரிய விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தவர்கள் தேசப்பற்றாளர்களா ? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் எரிபொருள் விலையேற்றத்திற்கு ஆதரவாகவும் அமைச்சர் உதய கம்மன்பிலவைப் பாதுகாக்கும் வகையிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதேசங்களுக்கும் சென்று, அவர்களது தேசத்துரோக செயல் தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்தும் நடவடிக்கைளை ஆரம்பிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அதிகளவான சிறுநீரக நோயாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகி வரும் நிலையில், நாட்டின் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியும் காணப்படும் தருணத்தில் இந்த உதவி மிகவும் பொருத்தமானதும் அவசியமானதும் என்று சுட்டிக்காட்டியுள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஷோபன், இவ்வுதவிக்காக முல்லைத்தீவு மக்களின் சார்பில் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேற்படி உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இரா.சாணக்கியன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிரேஷ்ட உப தலைவர் ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad