ஸஹ்ரானின் குண்டு வெடிப்பிலிருந்து முஸ்லிம் சமூகம் மனவடுவுக்கு உள்ளாகத் தொடங்கியதிலிருந்து இன்னமும் மீளவில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

ஸஹ்ரானின் குண்டு வெடிப்பிலிருந்து முஸ்லிம் சமூகம் மனவடுவுக்கு உள்ளாகத் தொடங்கியதிலிருந்து இன்னமும் மீளவில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஸஹ்ரானின் குண்டு வெடிப்பில் தொடங்கி அதன் பின்னராக இடம்பெற்று வந்த ஒவ்வொரு தாக்கங்களிலுமிருந்தும் கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான மனவடுவுக்கு உள்ளாகியே வந்திருக்கிறது. அந்தப் பாதிப்புக்களிலிருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக டப் (Tab) கணனிகளை கையளிக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாலை 14.07.2021 நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வலயக் கல்வி அதிகாரிகள் வலயப் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், ஸஹ்ரானின் குண்டு வெடிப்பு அதன் பின்னர் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வுகள் தற்போது கொரோனா வைரஸ் தொற்று என்று தொடர்ச்சியான துயரங்கள் முஸ்லிம் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன.

இந்த நிலையில் இந்த வகைப் பாதிப்புக்களிலிருந்து தங்களை மீள் எழுப்பிக் கொள்வதற்கு முஸ்லிம்கள் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தக் கால கட்டத்தில் முஸ்லிம் சமூக மாணவர்களின் கல்வியைத் தக்க வைப்பதும் ஒரு பாரிய சவாலாகும்.

இந்த சவால் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசியர்கள் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது முடிவுக்கு வருமென்றும் அறுதியிட்டுக் கூறமுடியாது.
அதற்கு உங்களது தியாகங்கள் நிச்சயம் தேவை. இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலகட்டத்தில் நவீன தொழினுட்பத்தோடு இணைந்த கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.

அந்தக் கல்வியினூடாக முடிந்தளவு மாணவர்களுக்கு போதிப்பதற்கு ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நவீன தொடர்பாடல்களைக் கையாள்வதில் இளவயதினர் மிகுந்த பாண்டியத்தியம் பெற்றுள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள். 

எனவே தேவையேற்படும்பட்சத்தில் அவ்வாறான தொழினுட்பத் திறன் வாய்ந்த மாணவர்களினதும் உதவியை ஆசிரியர்கள் பெற்று தற்போதைய இலத்திரனியல் கல்வியின் பலாபலன்களை அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றார்கள்.

No comments:

Post a Comment