(நா.தனுஜா)
பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்திற்கான கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பயணத்தில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளின் போது துறைமுகம் மற்றும் சுங்கப் பிரிவினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுத்து, அச்சேவையை செயற்திறனான வகையில் முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் உரிய தரப்பினரால் ஆராயப்பட்டுள்ளது.
கொள்கலன்களைக் கொண்டு செல்லும் போது சம்பந்தப்பட்ட தரப்பினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலான கலந்துரையாடல் துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் திங்கட்கிழமை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளின் போது கொள்கலன்களைப் பெற்றுக் கொள்வதிலும் அவற்றை மீள வழங்குவதிலும் காணப்படும் சிக்கல்கள், கொள்கலன்களைப் பெறல் மற்றும் வழங்கலின் போது துறைமுகத்தின் நான்கு முனையங்களிலும் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருத்தல், இரவில் கொள்கலன் பரிமாற்ற சேவை முன்னெடுக்கப்படாததன் காரணமாக பகல் வேளையில் அதிக வாகன நெரிசல் ஏற்படல், வங்கி வசதி மற்றும் ஏனைய சேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் குறைந்தபட்சம் இரண்டு நாட்களேனும் விரயமாதல், சுங்கச் சேவையைப் பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் நெருக்கடிகள், எல்.சி.எல் கார்கோ விடுவிப்பை முறைமைப்படுத்தல் ஆகிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்பட்டது.
பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்திற்கான கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பயணத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளின் போது பொருட்களுக்கான அனுமதி வழங்கல் செயற்பாடுகளில் துறைமுகம் மற்றும் சுங்கப் பிரிவு எதிர்கொண்டிருக்கும் சவால்களை வெற்றி கொண்டு, செயற்திறன் வாய்ந்த சேவை வழங்கலை முன்னெடுத்துச் செல்வதற்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை சுங்கப் பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புக்களுடன் அமைச்சர்கள் கலந்துரையாடினார்கள்.
துறைமுக சேவை மற்றும் சுங்கச் சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் ஊடாக மேற்படி சிக்கல்கள் பலவற்றுக்குத் தீர்வு கிடைக்கப் பெறும் அதேவேளை, அதன் மூலம் முறையானதும் செயற்திறன் வாய்ந்ததுமான சேவையை வழங்க முடியும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதேவேளை பொருட்களுக்கான அனுமதி வழங்கல் நடவடிக்கையின் போது, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பொருட்களைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதத்தின் விளைவாக ஒட்டு மொத்த செயற்பாட்டிலும் தாமதம் ஏற்படுகின்றது. அதற்குத் தீர்வுகாண்பதற்கு பார்க்கோர்ட் அடிப்படையிலான வரிசைப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்தோடு துறைமுக, சுங்க சேவையை மாத்திரமன்றி இதனுடன் தொடர்புடைய வங்கிச் சேவையையும் டிஜிட்டல்மயப்படுத்துவதன் ஊடாக ஒன்லைன் மூலம் அச்சேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இப்பிராந்தியத்தின் கடல் மார்க்க கேந்திர நிலையமாக இலங்கை மாறுவதற்கு அது மிக முக்கிய அடிப்படையாக அமையும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment