கூட்டணியமைத்துள்ளதால் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது, முரண்பாடுகளுக்கு பிரதமர் விரைவில் தீர்வு காண வேண்டும் : வாசுதேவ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

கூட்டணியமைத்துள்ளதால் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது, முரண்பாடுகளுக்கு பிரதமர் விரைவில் தீர்வு காண வேண்டும் : வாசுதேவ நாணயக்கார

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் தீர்வு காண வேண்டும். பங்காளி கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாட்டை பகிரங்கப்படுத்தியுள்ளது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்டோம். அனைத்து தரப்பினரது ஒன்றிணைவை கருத்திற் கொண்டே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் கூட்டணியின் பலத்தை கருதியே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பங்காளி கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் தொடர்ச்சியாக புறக்கணக்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் அரசாங்கம் கொள்கைக்கு முரணான செயற்பட்ட போது அதனை பங்காளி கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டினோம். கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்தினால் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரையில் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். தீர்மானம் எடுப்பது காலதாமதமாகுவது கூட்டணியை மேலும் பலவீனப்படுத்தும்.

பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டணி குறித்து குறிப்பிடும் கருத்துக்கள் அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகளை பகிரங்கப்படுத்தியுள்ளது. இவ்வாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும். கூட்டணியின் முரண்பாடுகள் தீவிரமடைந்தால் அது அரசாங்கத்தை முழுமையாக பாதிக்கும் என்றார்.

No comments:

Post a Comment