நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிப்போம் : அரசாங்கத்திற்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என்கின்றார் பிரசன்ன ரணதுங்க - News View

Breaking

Wednesday, July 14, 2021

நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிப்போம் : அரசாங்கத்திற்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என்கின்றார் பிரசன்ன ரணதுங்க

(இராஜதுரை ஹஷான்)

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிப்போம். அரசாங்கத்திற்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. பிரச்சினை உள்ளது என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை மேற்பார்வை செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றில் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள காரணிகள் அடிப்படையற்றவை.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிப்போம். இவ்விடயத்தில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கொள்கையில் உள்ளார்கள். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் காணப்படுவதாக ஒரு தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தனிப்பட்ட பிரச்சினைகளை அரசாங்கத்தினதும், கூட்டணியினதும் முரண்பாடு என்று கருத முடியது. பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிட்டுக் கொள்பவர்களின் அரசியல் உள்நோக்கங்கள் அறியப்பட்டுள்ளன. ஆகவே அவ்விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது.

செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் கொவிட்-19 தடுப்பூசியை 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தும் திட்டம் தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பொருளாதார நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment