கொரோணா உச்சத்தில் உள்ள கல்முனை பிராந்தியத்துக்குத் தடுப்பூசி எங்கே ? : அறிக்கைகள் மட்டுமே வெளியாகிறது தடுப்பூசியை காணவில்லை என்கிறார் பீ .எம். ஷிபான் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

கொரோணா உச்சத்தில் உள்ள கல்முனை பிராந்தியத்துக்குத் தடுப்பூசி எங்கே ? : அறிக்கைகள் மட்டுமே வெளியாகிறது தடுப்பூசியை காணவில்லை என்கிறார் பீ .எம். ஷிபான்

நூருல் ஹுதா உமர்

இலங்கையில் இன்றைய சூழ்நிலையில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவு கொவிட்-19 தாக்கத்தின் உச்சத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு மூத்த பிரஜைக்கும் உத்தியோகபூர்வமாக தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்ற செய்தி வேண்டுமென்றே கல்முனை பிராந்திய மக்கள் புறக்கணிக்கப்படுகின்றோமா? என்ற அச்சத்தைத் உண்டாக்கியுள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமான போதிலும் கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் மார்ச் மாதம் முதல் நாடு பூராகவும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமானது. 

கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும் கல்முனை அதில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்ட கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினை சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் கடந்த ஜுன் மாதம் 8ம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும், இந்த கோரிக்கையினை ஏற்ற பிரதமர் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ராஜாங்க அமைச்சர் சண்ன ஜயசுமனவுக்கு பணிப்புரை விடுத்தாகவும் அதற்கமைய சண்ன ஜயசுமன சுகாதார துறை அதிகாரிகளினை உடனடியாக தொடர்பு கொண்டு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கை விட்டிருந்தனர்.

ஆனால் இன்று ஜுலை 8 ம் திகதியாகியும் தடுப்பூசியின் வாசனையைக்கூட நுகர முடியாப் பிராந்தியமாக கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவு காணப்படுகிறது. 

கடந்த முதலாம் திகதி தடுப்பூசி இன்மையால் கல்முனையில் அதிகரித்து வரும் மரணங்கள் தொடர்பிலும் மாநகர முதல்வர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை தடுப்பூசி தொடர்பில் எந்த விதமான நடவடிக்கையும் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை பிரிவுக்காக இடம்பெற்றதாகத் தெரியவில்லை. 

ஆகவேதான் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கூடிய கரிசனை செலுத்தி கல்முனையில் கொவிட்-19 தாக்கத்தினால் அரங்கேறும் மரண ஓலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டுமென வேண்டுகின்றேன் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment