அரிசியை அதிக விலையில் விற்பவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை : நெல்லுக்கான நிர்ணய விலையில் 5 சதமேனும் குறைக்க இடமளிக்க மாட்டோம் - பந்துல குணவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

அரிசியை அதிக விலையில் விற்பவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை : நெல்லுக்கான நிர்ணய விலையில் 5 சதமேனும் குறைக்க இடமளிக்க மாட்டோம் - பந்துல குணவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

நிர்ணயிக்கப்படும் விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் அதற்கான தண்டப்பணத்தை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க முடியுமான வகையில் சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரிசியை பதுக்கி வைத்துக் கொண்டு விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிர்காலத்தில் அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் எந்த வகையான அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை பாதுகாப்பாக கையிருப்பில் வைத்துக் கொண்டு செல்கின்றோம்.

அதேபோன்று விவசாயிகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் நெல்லுக்கான நிர்ணய விலையில் 5 சதமேனும் குறைப்பதற்கு இடமளிக்க மாட்டோம்.

தற்போது அரசாங்கம் விவசாயிகளுக்கு 50 ரூபா தொடக்கம் 52 ரூபா வரை விலை நிர்ணயம் செய்திருக்கின்றது. அந்த விலைக்கு விவசாயிகளிடமிருக்கும் அனைத்து நெல் தொகைகளையேனும் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

அத்துடன் இந்த போகத்தில் நெல் அறுவடை இடம்பெறும்போது நுகர்வோர் தொடர்பான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக் கொள்ள இருக்கின்றோம்.

அதன் பின்னர் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தண்டப் பணத்தை 2 ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்போம்.

நிர்ணயிக்கப்படும் விலையைவிட 50 சமேனும் அதிகமாக யாராவது அரிசி விற்பனை செய்தாலும் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டிவரும்.

மேலும் சில்லரை வியாபாரிகளிடம் மாத்திரம் இந்த தண்டப்பணத்தை அறவிடுவதற்கு பதிலாக குறித்த தண்டப்பணத்தில் ஒரு தொகையை, குறித்த வியாபாரிக்கு பொருட்களை விநியோகித்த விநியோகஸ்தரிடமோ அல்லது அரிசி ஆலை உரிமையாளரிடமிருந்தோ பெற்றுக் கொள்ள முடியுமான வகையில், தேவையான திருத்தங்களை குறித்த சட்ட மூலத்தில் மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் எமது சட்டப்பிரிவு தற்போது கலந்துரையாடி வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment