வாடகைக்கு வாகனங்களைப் பெற்று விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல் : பல்வேறு மோசடிகள் தொடர்பில் 48 முறைப்பாடுகள், 6 பிடியாணைகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

வாடகைக்கு வாகனங்களைப் பெற்று விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல் : பல்வேறு மோசடிகள் தொடர்பில் 48 முறைப்பாடுகள், 6 பிடியாணைகள்

(எம்.மனோசித்ரா)

நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினரால் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிலையங்களிலிருந்து வாகனங்களைப் பெற்று அவற்றை விற்பனை செய்துள்ளமை தொடர்பில் 32 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக பல்வேறு மோசடிகள் தொடர்பில் 48 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, கண்டி நீதிமன்றத்தினால் 6 பிடியாணைகளும் பிறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஹோமாகம பிரதேசத்தில் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிலையமொன்றிலிருந்து 50 இலட்சம் பெறுமதியுடைய வாகனத்தை குறித்த சந்தேகநபர் இரு வாரங்களுக்கு வாடகைக்கு பெற்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்தோடு அவர் வாகனத்தைப் பெற்ற நிலையத்திற்கு வழங்கியுள்ள ஆவணங்களும் போலியானவை என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இவ்வாறு பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் தொடர்பில் கண்டி விசேட விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது குறித்த சந்தேகநபர் தொடர்பில் வெவ்வேறு மோசடிகள் தொடர்பில் 48 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு வாடகைக்கு பெற்ற வாகனங்களை விற்றமை, பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்தமை தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளன. மேலும் கண்டி நீதிமன்றத்தினால் குறித்த சந்தேகநபருக்கு எதிராக 6 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேகநபர் பிரமுதித அரலிய விக்கிரமசிங்க என்ற கண்டி - கொட்டுகொடெல்ல வீதியைச் சேர்ந்தவர் என்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நேற்று ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கண்டி பொலிஸாருடன் நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவு என்பன மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிலைய உரிமையாளர்கள் இவ்வாறான நபர்கள் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment