ஜெர்மனியில் பெரு வெள்ளம் : குறைந்தது 42 பேர் பலி : மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தல் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

ஜெர்மனியில் பெரு வெள்ளம் : குறைந்தது 42 பேர் பலி : மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தல்

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். பலரைக் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அண்டை நாடான பெல்ஜியத்தில் 6 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர். அங்குள்ள லீஜ் நகரத்திலிருந்து குடியிருப்போர் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

நெதர்லாந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணமான லிம்பர்க்கில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
ரைன்லேண்ட்-பலட்டினேதட் மாநிலத்தின் தலைவர் மாலு ட்ரேயர், இந்த வெள்ளத்தை "பேரழிவு" எனக் கூறியுள்ளார்.

''பலர் இறந்துள்ளனர், காணாமல் போய் உள்ளனர். பலர் இன்னும் ஆபத்தில் உள்ளனர். எங்கள் அவரச சேவைகள் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன'' என்கிறார் அவர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடனான சந்திப்புக்காக அமெரிக்காவில் உள்ள ஜெர்மனி சான்சிலர் ஏங்கலா மெர்கல், பேரழிவால் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரைன்லேண்ட்-பாலாடினேட்டின் அஹ்ர்வீலர் மாவட்டத்தில், அஹ்ர் நதி கரைபுரண்டோடியதால் வெள்ளத்தில் சிக்கி 19 பேர் இறந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க, காவல்துறை ஹெலிகொப்டர்களும், நூற்றுக்கணக்கான படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர். மீட்கப்படுவதற்காக டஸின் கணக்கான மக்கள் வீட்டுக் கூரைகளில் காத்திருப்பதாக காவல்துறை முன்னர் தெரிவித்தது.

மேற்கு ஜெர்மனியில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மலைப் பகுதியான ஈபிள் பிராந்தியத்தில் உள்ள ஷுல்ட் பீ அடெனாவ் மாவட்டத்தில் சுமார் 25 வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. சில வீடுகளுக்கான பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு படகில் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா பகுதியில் புதன்கிழமையன்று இரண்டு தீயணைப்பு வீரர்கள் இறந்தனர். ஒருவர் நீரில் மூழ்கியும், மற்றவர் மீட்பு நடவடிக்கையின் போதும் இறந்ததாகக் கூறப்படுகிறது.

ஜெர்மனி போலவே பெல்ஜியத்திலும் நிலைமை மோசமாக உள்ளது. பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்பிற்குப் பிறகு பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய நகர்ப்புறப் பகுதியான லீஜினில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அந்நகர மேயர் வலியுறுத்தியுள்ளார். 

வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்கள் தங்கள் கட்டிடங்களின் மேல்த் தளங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெல்ஜிய நகரமான பெபின்ஸ்டரில் 10 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மோசமான வானிலை காரணமாக பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை கணிப்புகள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad