நாட்டின் 342 பிரதேச சபைகளிலும் புதிய தபால் நிலையங்கள் திறக்கப்படும் : அமைச்சர் கெஹெலிய - News View

Breaking

Monday, July 26, 2021

நாட்டின் 342 பிரதேச சபைகளிலும் புதிய தபால் நிலையங்கள் திறக்கப்படும் : அமைச்சர் கெஹெலிய

தனியார் துறையை விடவும் வெற்றிகரமான துரித சேவை முறை ஒன்றை இலங்கை தபால் சேவை அறிமுகம் செய்ய உள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் அஞ்சல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவ பிரதேசத்திலுள்ள வெரல்லகம என்ற இடத்தில் புதிய தபால் நிலையத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்தாவது, எதிர்காலத்தில், தபால் துறைக்குச் சொந்தமான சகல சொத்துக்களில் இருந்தும் தபால் திணைக்களத்திற்கு வருமானம் ஈட்ட உதவும் வகையில் திட்டமிடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் துறை என்ற துரித முறை காரணமாக பெருமளவு இலாபமீட்டலாம். தனியார் துறையை விடவும் நம்பகமானதும் திறமை மிக்கதுமான எக்ஸ்பிரஸ் சேவை ஒன்றை நிறுவ அஞ்சல் திணைக்களம் முயற்சிக்கிறது. 

கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு நோயாளிகளுக்கு மருந்து விநியோகம் தபால் துறையூடாக மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. 

நாட்டின் 342 பிரதேச சபைகளில் புதிய தபால் நிலையங்களை திறக்கும் திட்டம் தொடங்கப்பட்டதும், அது பொதுமக்களுக்கு இன்னும் கூடுதல் சேவைகளை வழங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். 

மோட்டார் போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் இலக்கத் தகடுகளை (நம்பர் பிளேட்டுகளை) வினியேகிக்க புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும். 

இப்படியான திட்டங்கள் மூலம் தபால் துரித சேவை யூடாக வீடுகளுக்கே மற்றும் பல ஆவணங்களை விநியோகிக்கும் முறை பற்றியும் திட்டமிடப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குனதிலேக ராஜபக்‌ஷ, ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் தலைவர் ஆனந்த ஜெயவிலால், தபால்மா அதிபர் ரஞ்சித் அரியரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(அக்குறணை குறூப் நிருபர்)

No comments:

Post a Comment