24 மணித்தியாலத்தில் 12 பேர் பலி : சாரதிகள் தூக்கம், சோர்வாக இருந்தால் வாகனங்களை செலுத்துவதை தவிருங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

24 மணித்தியாலத்தில் 12 பேர் பலி : சாரதிகள் தூக்கம், சோர்வாக இருந்தால் வாகனங்களை செலுத்துவதை தவிருங்கள்

(செ.தேன்மொழி)

வீதி விபத்துகள் காரணமாக நாள் ஒன்றுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலைமையானது வழமைக்கு புறம்பாக காணப்படுவதுடன், பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வீதி விபத்துகள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுள் 7 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளதுடன், மூன்று பாதசாரதிகளும், வேறு வாகனங்களில் பயணித்த இருவரும் உயிரிழந்தவர்களில் உள்ளடங்குகின்றனர்.

இந்த விபத்துகள் காரணமாக நாள் ஒன்றுக்கு 8 பேர் வரையிலேயே உயிரிழந்து வந்த நிலையில், தற்போது 12 உயிரிழப்புகள் வரை அது அதிகரித்துள்ளது. இந்த நிலைமை வழமைக்கு புறம்பானதாகும். அதனை தடுப்பதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

இதேவேளை, வாகன சாரதிகளின் கவனக்குறைபாடு மற்றும் அக்கறையின்மையின் காரணமாகவே இவ்வாறு அதிகளவான விபத்துகள் பதிவாகி வருகின்றன.

வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகன சாரதிகள் மட்டுமன்றி பயணிகளும் விபத்துக்களை தடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும்.

இந்நிலையில் இரவு வேளைகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தூக்க மயக்கத்திலோ, சோர்வாகவோ இருந்தால் வாகனங்களை செலுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வீதி விபத்துகளை தடுப்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சாரதிகள் மற்றும் பயணிகள் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment