மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அவரது பெற்றோர் உட்பட 16 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அவரது பெற்றோர் உட்பட 16 பேர் கைது

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவருக்கு நீதி கோரி அவரது தாய் தந்தையர் உட்பட பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பஸ் வண்டியில் நகரை நோக்கி வந்த 16 பேரை இன்று புதன்கிழமை (07.07.2021) பகல் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 21ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர், பொதுமகன் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நீதி கோரி காந்தி பூங்காவிற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, பஸ் வண்டி ஒன்றில் வந்திருந்ததுடன், அங்கு இளைஞர்களும் ஒன்றிணைந்து இருந்தனர்.

இதனையடுத்து, அந்த பகுதிக்கு பொலிசார் புலனாய்வு பிரிவினர் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை அங்கிருந்து எச்சரித்து எந்த விதமான ஆர்ப்பாட்டங்களோ, ஓன்று கூடல்களோ செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பதாக தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர்.

அதேவேளை பஸ் வண்டியில் வந்தவர்கள் அங்கிருந்து விலகி சென்ற நிலையில் அவர்களை பொலிசார் பின் தொடர்ந்து அந்த பஸ் வண்டியிலுள்ளவர்களுடன் பஸ் வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தடுத்து வைத்து அதில் இருந்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தந்தை தாயார் உட்பட 16 பேரை கைது செய்துள்ளனர் .

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு ஊடகவியலாளர் செல்வதற்கு பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment