15 வயது சிறுமி இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை : நால்வருக்கு கடும் நிபந்தனையுடன் பிணை, மூவருக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

15 வயது சிறுமி இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை : நால்வருக்கு கடும் நிபந்தனையுடன் பிணை, மூவருக்கு விளக்கமறியல்

(எம்.எப்.எம்.பஸீர்)

15 வயதான சிறுமி ஒருவர், இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், கைதான நால்வருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கடும் நிபந்தனை விதித்து பிணையளித்தது.

பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் லெப்டினன் கொமாண்டர் திமுத்து டி சில்வா, மிஹிந்தலை பிரதேச சபை உப தலைவர் லலித்த எதிரி சிங்க, மாணிக்கக்கல் வர்த்தகர் மற்றும் சோயா உற்பத்தி தொடர்பிலான வர்த்தகர் ஒருவர் ஆகியோருக்கே நீதிமன்றம் பிணையளித்தது.

குறித்த நால்வரும் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்ப்ட்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு சாட்சியாளராக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன் போது அடையாள அணிவகுப்பில் அவர்கள் நால்வரையும் பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதாக திறந்த மன்றில் நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம அறிவித்தார்.

குறித்த நால்வருக்கும் அச்சிறுமி, 19 வயதான யுவதியாக காட்டியே பணத்துக்கு தரகர்களால் வழங்கப்பட்டுள்ளதாக அவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ள நிலையில், அடையாள அணிவகுப்பின் போது குறித்த சிறுமி குறித்த நால்வரையும் அடையாளம் காட்டி, அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் வாக்கு மூலம் அளித்ததாக நீதிவான் கூறினார்.

குறித்த நால்வரும் ஒரு போதும் அச்சிறுமியிடம் அவரது வயது தொடர்பிலோ அவர் பாடசாலை செல்கிறார் என்பது தொடர்பிலோ வினவவில்லை என சிறுமி தெரிவித்ததாகவும், வழக்கின் பிரதான சந்தேக நபரான ரஜீவ் ஊடாகவே சிறுமி இவர்களுக்கு பல உபாயங்களை கையாண்டு விற்கப்பட்டுள்ளதாக சிறுமி குறிப்பிட்டதாக நீதிவான் கூறினார்.

இந்த நிலையிலேயே குறித்த 4 சந்தேக நபர்களையும் ( 9,11,13, 23 ஆம் சந்தேக நபர்கள்) தலா 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை, 25 இலட்சம் ரூபா பெருமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிவான் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவில் காலை 9.00 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அறிவித்தார்.

அத்துடன் விசாரணைகளில் தலையீடு செய்தாலோ, சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தாலோ பிணை ரத்து செய்யப்பட்டு மீள விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சந்தேக நபர்களுக்கு நீதிவான் எச்சரித்தார்.

இதனிடையே, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவ்விவகாரத்தின் மேலும் 2 சந்தேக நபர்களும் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்ட ஒருவரும் இவ்விவகார விசாரணை அதிகாரியான பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேனுகா, மற்றும் சி.ஐ.டி. டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சேனாரத்ன ஆகியோரால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது அம்மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அவர்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad