உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது, கொரோனாவைக் கட்டுப்படுத்த செப்டெம்பருக்குள் ஒவ்வொரு நாடும் 10 % மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது, கொரோனாவைக் கட்டுப்படுத்த செப்டெம்பருக்குள் ஒவ்வொரு நாடும் 10 % மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் - உலக சுகாதார ஸ்தாபனம்

டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் கிருமியானது, அது கண்டறியப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.

இதில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது டெல்டா வகை வைரஸ். இந்தியாவில் மிக வேகமாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய டெல்டா வைரஸ், உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய சர்வதேச கூட்டமைப்பின் நிகழ்ச்சியி்ல் காணொலி வாயிலாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்றுமுன்தினம் பங்கேற்றார். 

அப்போது அவர் பேசியதாவது, கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியிருப்பதால், தொற்றுநோயின் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் உள்ளது என எச்சரித்துள்ளார்.

இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல என்றும், டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பது தடுப்பூசி ஒன்று மட்டும்தான் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனால் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வளர்ந்த நாடுகளில் தடுப்பூசி எளிதாக மக்களுக்குக் கிடைத்து விடுகிறது, ஆனால் வளர்ந்து வரும் நாடுகள், ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பது பெரும் சிரமமாக இருந்து வருகிறது.

இதனால், ஏழை நாடுகளின் மக்களுக்காக தடுப்பூசி வழங்க கோவேக்ஸ் எனும் திட்டத்தை ஐ.நா. உருவாக்கியது. இந்தத் திட்டத்தில் வளர்ந்த நாடுகள் தங்களின் பங்களிப்பாக தடுப்பூசியை வழங்கிட வேண்டும், அதன் மூலம் அந்தத் தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்திலும் தற்போது மந்தநிலை நீடிக்கிறது. 

உலகளவில் தடுப்பூசி செலுத்துவதிலும், கிடைப்பதிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சில வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு அதிகமான பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவே இல்லை. அங்குள்ள முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், முதியோர் உள்ளிட்ட எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் மக்களுக்குக்கூட தடுப்பூசி கிடைக்கவில்லை.

சில நாடுகள் இன்னும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது அந்த நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆதலால், எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடித்தால்தான் ஓரளவுக்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாக அமையும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவீத மக்களுக்கும், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 70 சதவீதம் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதுதான் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வரவும் இதுதான் சிறந்த வழி. ஒவ்வொரு இடத்திலும் கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் வரை, எந்த இடத்திலும் நம்மால் தொற்றை ஒழிக்க முடியாது.

No comments:

Post a Comment