தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேச அங்கீகார இலத்திரனியல் அட்டை - அவசியத்தின் அடிப்படையில் 0117966366 அழைத்து பெறலாம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேச அங்கீகார இலத்திரனியல் அட்டை - அவசியத்தின் அடிப்படையில் 0117966366 அழைத்து பெறலாம்

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற அனைத்து இலங்கையர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, தடுப்பூசி டிஜிட்டல் அட்டை (Digital Vaccine Card) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் எனும் வகையில் நாமல் ராஜபக்ஷ ஆகியோரினால் சுகாதார அமைச்சில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதற்கமைய, இம்மாதம் ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் ஒலிம்பிக் தொடரிற்கு செல்லவுள்ள இலங்கை ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் செயலாளர் கபில ஜீவந்தவுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசி டிஜிட்டல் அட்டை வழங்கப்பட்டது.

இதற்கான முயற்சிகளை எடுத்த ICTA நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த டிஜிட்டல் அட்டையில், தடுப்பூசி பெற்ற நபரின் பெயர், வயது, அடையாள அட்டை இலக்கம், தடுப்பூசி வழங்கப்பட்ட திகதி, பெறப்பட்ட தடுப்பூசி வகை, தொகுதி எண் ஆகிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இரு கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களையும் பெற்ற அனைத்து இலங்கையர்களுக்கும், கொவிட் தடுப்பூசி டிஜிட்டல் அட்டைக்கான விண்ணப்பப்படிவம், எதிர்காலத்தில் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் இணைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களின் அவசியத்தின் அடிப்படையில் குறித்த இலத்திரனியல் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியுமெனவும், 0117966366 எனும் தொலைபேசி இலக்கத்தை அழைத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment