(நா.தனுஜா)
உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் கடற்பிராந்தியப் பல்வகைமைத் தன்மை, கடல் மாசடைவு, கடற்பிராந்தியத்தை மையப்படுத்திய வளங்கள் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் பூகோளப் பாதுகாப்பு அமைப்பினால் எதிர்வரும் 5 - 8 ஆம் திகதி வரையான நான்கு நாள் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பூகோளப் பாதுகாப்பு (பேர்ள் புரெக்டர்ஸ்) அமைப்பினால் அதன் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கடற்பிராந்திய மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஜுன் மாதம் 8 ஆம் திகதி உலக சமுத்திர தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது 2030 ஆம் ஆண்டாகும் போது 30 சதவீதமான கடற் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதையே இது நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடற் பிராந்தியப் பாதுகாப்புடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான 4 நாட்கள் மாநாடு பூகோளப் பாதுகாப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இந்த 'உலக சமுத்திர தின மாநாடு' கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, ப்ளு சிசோர்ஸ் ட்ரஸ்ட் ஆகியவற்றின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இலங்கை கடற் பிராந்தியத்தின் பல் வகைமை, கடல் மாசடைவு மற்றும் அதற்கான தீர்வுகள், கடற் பிராந்தியத்தை மையப்படுத்தி வளங்களும் பொருளாதாரமும், இலங்கை கடற் பிராந்தியத்தின் எதிர்கால நிலை ஆகிய விடயங்கள் தொடர்பில் இம்மாநாட்டின்போது விசேடமாக ஆராயப்படும்.
இலங்கையானது நிலப்பரப்பை விடவும் 20 மடங்கு அதிகமாக கடற்பரப்பினால் சூழப்பட்டிருக்கும் நிலையில், சூழலியல் மற்றும் பொருளாதார ரீதியில் அதனைத் திறம்படக் கையாளும் வழிவகைகள் பற்றி தெளிவை இலங்கை கொண்டிருப்பது அவசியமாகும்.
அத்தோடு கடற் பிராந்தியத்தைப் பாதுகாத்து அதனை எதிர்கால சந்ததியினரிடம் கையளிப்பதற்கும் இந்தப் புரிதல் இன்றியமையாததாகும்.
உலக சமுத்திர தின மாநாடு இலங்கையில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த மாநாடு 'ஸ்ரீம் யார்ட்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய வழியில் நடைபெறவிருப்பதுடன் அதில் விரும்பியவர்கள் கலந்துகொள்ள முடியும்.
அதுமாத்திரமன்றி குறித்த மாநாடு பதிவு செய்யப்பட்டு அந்தக் காணொளிகளும் பூகோளப் பாதுகாப்பு அமைப்பின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment