பிரிட்டனின் பிரபல Vogue சஞ்சிகையின் அட்டைப் படத்தில் மலாலா யூசுப் சாய் இடம்பிடித்துள்ளார்.
பெண்கள் கல்வி மற்றும் பெண்கள் சமத்துவத்திற்காக போராடும் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாய் பிரிட்டனின் பிரபல Vogue சஞ்சிகையின் 2021 ஜூலை பதிப்பின் அட்டைப் படத்தின் நட்சத்திரமானார்.
இதனை Vogue சஞ்சிகை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், மலாலா சஞ்சிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவிக்கையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உணவகத்திற்கு ( மெக்டொனால்ட்) செல்வது மற்றும் விளையாடுவது உட்பட ஒவ்வொரு தருணத்தையும்' ரசித்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டு புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் தனது நேரத்தை செலவிட்டதைப் பற்றி விவரித்த அவர், நான் உண்மையில் எல்லாவற்றிலும் உற்சாகமாக இருந்தேன், உணவகம் (மெக்டொனால்ட்) செல்வது அல்லது என் நண்பர்களுடன் விளையாடுவது அல்லது ஒரு பேச்சு அல்லது ஒரு நிகழ்வுக்குச் செல்வது" என தெரிவித்துள்ளார்.
நான் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் நான் இதற்கு முன்பு இவற்றை பார்த்ததில்லை. அந்த சம்பவத்திலிருந்து நான் மீண்டு வந்ததால் என்னை ஒத்த வயதினருடன் ஒருபோதும் இருந்ததில்லை.
தற்போது உலகம் முழுவதும் பயணம் செய்கிறேன், ஒரு புத்தகத்தை வெளியிட்டேன், ஒரு ஆவணப்படம் செய்தேன், மேலும் பல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. பல்கலைக்கழகத்தில் இறுதியாக எனக்காக சிறிது நேரம் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.
மேலும், Vogue சஞ்சிகையின் அட்டைப் படத்தில் சிவப்பு நிற ஆடையுடன் தோன்றும் யூசுப் மலாலா, கலாச்சார ரீதியாக அவரின் ஆடையின் முக்கியத்துவத்தையும் விவரித்துள்ளார்.
"இது எங்களுக்கு ஒரு கலாச்சார அடையாளமாகும், எனவே நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை இது குறிக்கிறது," என தெரிவித்துள்ளார்.
"முஸ்லீம் பெண்கள், பாகிஸ்தானிய பெண்கள், நாங்கள் எங்கள் பாரம்பரிய உடையைப் பின்பற்றும்போது, நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களாக, அல்லது குரலற்றவர்களாக, அல்லது ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்வதாக கருதப்படுகிறோம்.
எனவே, நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், உங்கள் கலாச்சாரத்திற்குள் உங்கள் சொந்தக் குரலைக் கொண்டிருக்க முடியும், உங்கள் கலாச்சாரத்தில் நீங்கள் சமத்துவத்தை கொண்டிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானில் 2012 ஆம் ஆண்டு பாடசாலைக்குச் சென்று விட்டுத் திரும்பிய மலாலா யூசுபை தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர்.
இறந்து விட்டதாக நினைத்து அவர்கள் சென்றுவிட, அவருக்கு பாகிஸ்தான் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெண்களின் கல்விக்காக பேசிய சிறுமியை தாலிபான்கள் சுட்ட தகவல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மலாலாவுக்கு இங்கிலாந்தில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment