(எம்.ஆர்.எம்.வசீம்)
பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிகடை வரையிலான கடற்கரைக்கு அண்மித்த கரையோர மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவ கப்பல்களையும் கடற்றொழில் நடவடிக்கையில் இருந்து அகற்றுமாறு கடற்றொழில் திணைக்களம் மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிவிடும் நிலை இருந்து வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவு உறுதிப்படுத்தி இருக்கின்றது.
இவ்வாறு கப்பல் கடலில் மூழ்கும்போது, கப்பலில் இருக்கும் எரிபொருள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் மற்றும் கொள்களன்களின் இரும்பு பாகங்கள் கடலில் மிதந்து மீனவர்களின் கப்பல்களில் மோதும் அபாயம் இருக்கின்றது.
அதன் பிரகாரம் பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிகடை வரையில் கரையோர கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் கப்பல்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு ஏனைய பிரதேசங்களில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்துமாறும் பணிப்பாளர் நாயகம், அனைத்து மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கும் அறிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment