எரிவாயு சிலிண்டர்களில் மறைக்கப்பட்டு கடத்த்தப்பட்ட போதைப் பொருள் : டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜீயிற்கும் தொடர்பா..? : விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

எரிவாயு சிலிண்டர்களில் மறைக்கப்பட்டு கடத்த்தப்பட்ட போதைப் பொருள் : டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜீயிற்கும் தொடர்பா..? : விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிகம கடற்பரப்பின் மிரிஸ்ஸ, மோதர கடற்கரை ஊடாக நாட்டுக்குள் கடத்த முயன்ற சுமார் 220 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 219 கிலோ 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நேற்றுமுன்தினம் 12 ஆம் திகதி இரவு வேளையில் பொல்வத்து மோதர கடற்கரை ஊடாக நாட்டுக்குள் ஹெரோயின் போதைப் பொருள் ஒரு தொகை கடத்தப்படுவதாக எஸ்.ஐ.எஸ். எனப்படும் தேசிய உளவுச் சேவைக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையிலேயே இப்போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் இப்போதைப் பொருளினை கடத்தி வந்தமை தொடர்பில் ஆழ்கடல் மீனவப்படகொன்றும், சிறிய டிங்கி படகொன்றும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

எரிவாயு சிலிண்டர்கள் உரப்பைகளில் மறைக்கப்பட்டிருந்த போதைப் பொருள்

கடத்தப்படும் போதைப் பொருட்களை, இரு பெரிய உரப்பைகள், 4 எரிவாயு சிலிண்டர்களினுள் சூட்சுமமாக பொதி செய்திருந்த நிலையில் கைப்பற்றினர். நான்கு சிலிண்டர்களுக்குள்ளேயும் தலா 35 பெக்கட்டுக்கள் வீதம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏனையவை உரப் பைகளில் காணப்பட்டன.

கடத்தப்பட்டது எப்படி?

இதுவரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகள் பிரகாரம், மாத்தறை - கோட்டேகொட மீனவ துறைமுகத்திலிருந்து கடந்த மே 12 ஆம் திகதி மீனவ படகொன்று ஆழ்கடல் மீன் பீடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளது. இந்த மீன் பிடி படகூடாகவே சர்வதேச கடலில் இருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நம்புகின்றனர். அதன்படியே அப்படகை பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் பிரகாரம், சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி படகொன்றில் போதைப்பொருளினைப் பெற்று அதனை சூட்சுமமாக உரப்பைகள், சிலிண்டர்களில் பொதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 26 முதல் 43 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். அவர்கள் வெலிகம, அஹங்கம, திக்வெல்ல,கோட்டேகொட, இஹலவத்த, மிரிஸ்ஸ,பொல்வத்து மோதர மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் பலர் ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களாவர்.

இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் மேலும் மூவர் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய படகின் உரிமையாளர் மற்றும் இதனுடன் தொடர்புடைய மீனவ படகு மற்றும் டிங்கிப் படகுடன் கரையிலிருந்து தொலைபேசி தொடர்புகளைப் பேணிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்கள்
இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகரவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளில், இக்கடத்தல் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதி விசாரணைகளில், குறித்த போதைப் பொருளினை இலங்கைக்கு டுபாயில் மறைந்துள்ள சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் என அறியப்படும் கொஸ்கொட சுஜீயின் வலையமைப்பூடாக கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன் குறித்த போதைப் பொருளினை, தெற்கின் பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் என அறியப்படும் ' ஹரக் கடா' எனும் நபரின் சகா ஒருவரே தருவித்துள்ளதாக தகவல்கள் வெளிப்பட்டுள்ளதுடன், அது குறித்த மேலதிக விசாரணைகள் பிரத்தியேக பொலிஸ் குழுவூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிசார் எதிர்ப்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment