உயிர் நண்பர்களை துப்பறிந்த அமெரிக்கா. இதில் எமது முஸ்லிம் தலைவர்கள், உயர் அதிகாரிகளுக்கு படிப்பினைகள் உள்ளதா ? - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

உயிர் நண்பர்களை துப்பறிந்த அமெரிக்கா. இதில் எமது முஸ்லிம் தலைவர்கள், உயர் அதிகாரிகளுக்கு படிப்பினைகள் உள்ளதா ?

அமெரிக்கா தனது உயிர் நண்பர்களின் கைத்தொலைபேசியை ஒற்றுக் கேட்ட விவகாரம் அம்பலமானதால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது ஜெர்மன், பிரான்ஸ், நோர்வே, சுவிடன் உட்பட ஐரோப்பிய நாட்டு முக்கிய தலைவர்களும், இராணுவ தளபதிகளும் தங்களது கைத்தொலைபேசிகள் மூலமாக உரையாடியதனை டென்மார்க்கின் இணைய கேபிள் வழியாக அமெரிக்க உளவு பிரிவினர் ஒற்றுக் கேட்ட விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.

இவ்வாறு ஒற்றுக் கேட்டதானது “பராக் ஒபாமா” ஜனாதிபதியாகவும், இன்றைய ஜனாதிபதி “ஜோ பைடன்” உப ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் நடைபெற்றுள்ளது.

அருகில் உள்ளவர்கள் துரோகிகள் என்றும், தூரத்தில் இருப்பவர்கள் எதிரிகள் என்றும் அமெரிக்கா நன்றாக புரிந்து வைத்துள்ளது.

இதில் எதிரிகளைவிட துரோகிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்ற காரணத்தினால், அருகில் உள்ளவர்கள் உண்மையான நண்பர்களா அல்லது துரோகிகளா என்பதனை பரீட்சித்து பார்ப்பதற்காகவும், மற்றும் அவர்களது உள்ளக இராணுவ இரகசியங்களையும், தங்களது எதிரிக்கு அவர்கள் உதவி செய்கின்றார்களா என்பதனை அறிந்துகொள்வதற்காகவும் இவ்வாறு அமெரிக்கா ஒற்றுக் கேட்டுள்ளது.

இதுபோன்று முன்னெச்சரிக்கையாக இல்லாமல், நற்பு நாடுகளின் அரசியல் தலைவர்கள் கூறுகின்ற வார்த்தைகளை மட்டும் நம்பியிருந்தால், அமெரிக்காவின் வல்லரசு என்ற பிடி என்றோ தளர்ந்திருக்கும்.

இதில் எமது நாட்டில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு சிறந்த படிப்பினைகள் உள்ளது. எமது அரசியல் தலைவர்களை மட்டுமல்ல, காரியாலயங்களில் உள்ள உயர் அதிகாரிகளையும் நன்றாக ஏமாற்ற தெரிந்தவர்கள், நன்றாக ஏமாற்றி அவர்கள் மூலமாக காரியம் சாதித்துவருவதனை நாம் நீண்டகாலமாக அவதானித்து வருகின்றோம்.

அதாவது எமது சமூகத்தில் உள்ள சில நடிகர்கள், எமது தலைவர்கள் அல்லது உயர் அதிகாரிகளின் முகத்துக்கு முன்பாக நன்றாக புகழ்வார்கள். “மானே, தேனே, பொன்மானே” என்றெல்லாம் வசனங்கள் போட்டு தலைவர்களுக்கு ஏற்றாற்போல் நடிப்பார்கள்.

இவ்வாறானவர்கள் தலைவர்களுக்கு அரணாக இருந்துகொண்டு, வேசம்போட தெரியாத உண்மையாளர்களை அல்லது முகத்துக்கு நேரே உண்மை பேசுகின்றவர்களை நெருங்க விடமாட்டார்கள். குழிபறித்துக்கொண்டே இருப்பார்கள்.

அரசியல் தலைவர்களோ, அல்லது அதிகாரிகளோ தங்களை புகழ்கின்றவர்கள் நடிகர்களா அல்லது உண்மையான விசுவாசிகளா என்று அறியாத நிலையில், இவர்கள் கூறுகின்ற இனிமையான பொய்யான வசனங்கள் அனைத்தும் உண்மை என்றும், இவர்கள்தான் தங்களது நம்பிக்கையான விசுவாசிகள் என்றும் நம்பிவிடுவார்கள்.

இறுதியில் காலங்கள் சென்றதன் பின்பு நடிகர்களின் சுயரூபங்கள் வெளியாகி, உண்மை வெளிவந்ததும், “குத்துது, குடையுது” என்றும், துரோகம் செய்துவிட்டார்கள் என்றும் தலைவர்கள் அழுது புலம்பியதே வரலாறாகும்.

எனவே, அருகில் உள்ளவர்களுடன் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி அமெரிக்காவின் அரசியல் செயல்பாடுகள் எங்கள் அனைவருக்கும் சிறந்த பாடத்தினை கற்பித்து தருகின்றது.

இதனை எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல அதிகாரிகளும் கற்றுக்கொள்ள வேண்டும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment