ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்ற சந்திமல் ஜயசிங்கவின் பிறந்தநாள் களியாட்ட விவகாரம் : பியூமி ஹன்சமாலி, நடிகை மாதவி ஆகியோரின் தற்போதைய நிலையென்ன? - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்ற சந்திமல் ஜயசிங்கவின் பிறந்தநாள் களியாட்ட விவகாரம் : பியூமி ஹன்சமாலி, நடிகை மாதவி ஆகியோரின் தற்போதைய நிலையென்ன?

(எம்.எப்.எம்.பஸீர்)

ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்ற அழகுக்கலை நிபுணர் சந்திமல் ஜயசிங்கவின் பிறந்தநாள் களியாட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படும், மொடல் அழகி பியூமி ஹன்சமாலி, நடிகை மாதவி அன்டனி உட்பட மேலும் 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பெண்கள் 4 ஆண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் வை.பிரபாகரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில், நடிகை மாதவி அன்டனிக்கு மேலதிகமாக, சந்திமல் ஜயசிங்கவின் தாய் மற்றும் உறவுமுறை சகோதரி, நடிகை மாதவியின் கணவர் ஆகியோரும் உள்ளடங்கின்றனர்.

குறித்த பிறந்தநாள் களியாட்டத்தில், கைது செய்யப்பட வேண்டிய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானோரை பொருத்தமான பிணையில் விடுவிக்குமாறு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்து முன்னிலையான கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். அதன்படியே நீதிவான் அவர்களை பிணையில் செல்ல அனுமதித்தார்.

கடந்த 30 ஆம் திகதி கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் நடாத்தப்பட்ட பிறந்தநாள் களியாட்டம் தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிவானுக்கு தெரிவித்தனர்.

இதன்போது மன்றில் விடயங்களை முன்வைத்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, சந்தேக நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக பசறையில் உள்ள நிலையம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் குறித்த பிறந்தநாள் களியாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள சந்திமால் ஜயசிங்கவின் தாயார் 77 வயதினை உடையவர் எனவும் அவர் ஒஸ்டியோ புரோசிஸ் எனப்படும் எண்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மட்டும் அவரது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதார தரப்பு தீர்மானித்துள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா மன்றுக்கு அறிவித்தார்.

அத்துடன் இவ்விவகாரத்தில், களியாட்டம் இடம்பெற்ற ஷங்ரில்லா ஹோட்டல் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

அதன்படி குறித்த விசாரணைகளை விரைவாக நிறைவு செய்ய ஆலோசனை வழங்கிய நீதிவான் நேற்று மன்றில் ஆஜர் செய்யப்பட்ட 7 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்து வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

கடந்த மே 30 ஆம் திகதி சனியன்று இரவு, கொழும்பு - கோட்டையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளதாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. 

நாட்டில் நிலவும் தொற்று நோய் பரவல் சூழ்நிலையில், அனைத்து களியாட்ட நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளதன் பின்னணியிலும் தனிமைப்படுத்தல், பயணத்தடை விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையிலும் இந்த பிறந்தநாள் களியாட்ட நிகழ்வு தொடர்பில் உடன் விசாரணைகளை நடாத்த கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இப்பிறந்தநாள் களியாட்டத்தில் 20 முதல் 25 பேர் வரை பங்கேற்றுள்ளமை தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்படாத குறித்த களியாட்டத்தில் கலந்துகொண்டோரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் 15 பேர் கைது செய்யப்பட்ட பின்னர் அவ்விசாரணைகள் கோட்டை பொலிசாரிடமிருந்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிசாருக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையிலேயே இதுவரை கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கடந்த 2020 ஒக்டோபர் 15 ஆம் திகதி சுகாதார அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் 98 ஆவது பிரிவுடனும், 2021 மே 12 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட கொவிட் 19 பரவல் தடுப்பு வழிகாட்டல்களுடனும் இணைத்து பார்க்கப்பட வேண்டிய 1897 அம் ஆண்டின் 3 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் 4,5 ஆம் அத்தியாயங்கள் தண்டனை சட்டக் கோவையின் 264 ஆவது அத்தியாயத்துக்கு அமைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த களியாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தற்போது பசறை தனிமைப்படுத்தல் முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment