ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு ஒரு ஏமாற்று வித்தை - உதயகுமார் - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு ஒரு ஏமாற்று வித்தை - உதயகுமார்

தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு என்பது தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் ஒரு ஏமாற்று வித்தையாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குவதானால் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 20 கிலோவுக்கும் குறையாத கொழுந்து பறிக்க வேண்டும் என்று பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களை வற்புறுத்தி வருகின்றன.

அவ்வாறு தொழிலாளர்கள் செயல்படாவிட்டால் வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே தோட்டத் தொழிலாளர்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் வேலை வழங்கின்றன. இதனால் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் இடையில் நாள்தோறும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

தொழிலாளர்களின் பொருளாதார நிலைமையும் கீழ் மட்ட நிலைக்கு சென்றுள்ளதால் தொழிலாளர் குடும்பங்களின் வறுமை தாண்டவம் ஆடத் தொடங்கி உள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று மார்தட்டிய தொழிற்சங்கம் இன்று தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அவலங்களைக் கண்டு மௌனித்துப் போய் உள்ளது.

குறைந்த நாள் வேலை, குறைந்த சம்பளம், அதிக வேலை சுமை போன்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு தொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் பயண கட்டுப்பாட்டு காலத்திலும் தோட்டங்களில் தொழில் புரிந்து கொண்டு இருக்கின்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad