அட்டாளைச்சேனை ஆயுர்வேத மருத்துவமனை நிலையத்தில் குணமடைந்த முதல் தொற்றாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

அட்டாளைச்சேனை ஆயுர்வேத மருத்துவமனை நிலையத்தில் குணமடைந்த முதல் தொற்றாளர்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை தற்போது கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானோருக்கு சிகிச்சை வழங்கும் இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், அவர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்குவதற்கான வைத்தியசாலைகளில் இடநெருக்கடி ஏற்படலாமென்பதை கருத்திற் கொண்டு அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாகவே இவ்விதம் சிகிச்சை நிலையங்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவமனைகள் பலவற்றில் இவ்வாறான கொவிட் சிகிச்சை நிலையங்கள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடுத்த கட்டமாக நாட்டின் ஆயுர்வேத வைத்தியசாலைகள் சிலவற்றிலும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் நெருக்கடி நிலைமை எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக் கூடாதென்பதே இந்நடிவடிக்கையின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலும் தற்போது கொரோனா சிகிச்சை நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் இயங்கும் கொவிட்-19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் பூரண சுகமடைந்து வீடு செல்லும் போது அங்கு சிறு ஞாபகார்த்த நிகழ்வொன்று நடைபெற்றது.

அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு சென்றவருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. 

அட்டாளைச்சேனை கொவிட்-19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் மேற்படி நினைவுச் சின்னம் வழங்கும் பொருட்டு அச்சின்னம் தாதிய உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது. 

இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தினால் வழங்கப்பட்ட குறித்த நினைவுச் சின்னம் பின்னர் குணமடைந்தவருக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

நினைவுச் சின்னம் முதலில் தாதிய உத்தியோகத்தரிடம் கையளிக்கப்படுவதையும், அதன் பின்னர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவரிடம் வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம்.

றிசாத் ஏ.காதர்

No comments:

Post a Comment