(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த தீ பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பல், சுமார் 10 கடல் மைல் தூரத்தில் 70 அடி (21 மீற்றர்) ஆழத்தில் தொடர்ந்தும் கடலில் மூழ்கி வருகின்றது.
இந்நிலையில் குறித்த சரக்கு கப்பலின் தீ பரவல் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அலட்சியம் காரணமாக தீ பரவியிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
சி.ஐ.டி.யின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் அபேசிங்கவின் கீழ் இடம்பெறும் விஷேட விசாரணைகளில் இதுவரை வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய இந்த சந்தேகம் மேலெழுந்துள்ள நிலையில், அதனை உறுதி செய்துகொள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தமது பொறுப்பில் எடுத்துள்ள மாதிரிகள் மீதான பரிசோதனைகள் முடிவடைய வேண்டும் என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
கப்பலின் 80 சதவீதம் கடலில் மூழ்கியுள்ள நிலையில், எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவு இதுவரை அவதானிக்கப்படாத நிலையில், கப்பலில் இருந்த எரிபொருளில் ஒரு தொகை தீ காரணமாக தீர்ந்திருக்கலாம் எனும் சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் கப்பலின் தீ பரவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சிறப்புக்குழு, இதுவரை 30 இற்கும் அதிகமான வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளது.
அதில் கப்பல் கெப்டன் உள்ளிட்ட 25 கப்பல் ஊழியர்களின் வாக்கு மூலங்களும் உள்ளடங்குகின்றன. இதனைவிட மேலும் பல விஷேட நிபுணர்களின் அபிப்பிராயங்களும் சி.ஐ.டி.யினரால் வாக்கு மூலமாக பதியப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வுப் பிரிவின் ஒத்துழைப்புடன் இதுவரை சிறப்பு விசாரணையாளர்கள், சரக்கு கப்பலுக்கும், அக்கப்பலின் உள்நாட்டு பிரதிநிதிக்கும் இடையில் பரிமாற்றப்பட்ட மின்னஞ்சல்களில் காப்பு பிரதியைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே, அலட்சியம் காரணமாக கப்பலில் தீ பரவி இருப்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளது.
எனினும் அது தொடர்பில் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதற்காக கப்பலில் இருந்து பெறப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள கப்பலின் வி.டி.ஆர். பதிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment