சஹரானுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

சஹரானுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் இருவர் கைது

பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஐவருக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் பிரதி தபால் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினர் தங்களது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஐவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அடைக்கலம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

கஹட்டகஸ்திகிலிய, முகரியாவ பகுதியில் பிரதி தபால் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த, 35 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த தௌபீக் மௌலவி எனும் சந்தேக நபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவர்களின் பொறுப்பிக் கீழ் பெற்றுக் கொண்டுள்ளனர். 

இவர் பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத விசாரணைப்பிரிவின் சந்தேக நபர்கள் இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad