மதுவரி கட்டளைச் சட்டத்தை மீறி ஒன்லைன் முறையில் மதுபானங்களை விற்பனை செய்ய முயற்சிப்பது நடைமுறையிலுள்ள மதுவரி கட்டளைச்சட்டம் உட்பட இன்னும் பல சட்டங்களையும் மீறுவதாக அமையும் என இலங்கை மதுபான உரிமைச் சான்றிதழ் பெற்றோர் சங்கத்தின் தலைவர் அஜித் உடுகம தெரிவித்தார்.
கண்டியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மதுவரித் துறையினர் எடுக்கும் இதுபோன்ற முடிவுகளால் அரசாங்கம் சிரமத்திற்குள்ளாகி வருகின்றது. கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டத்தில் இது போன்ற திட்டங்கள் முன்வைத்து ஒருவகை அவமதிப்பை ஏற்படுத்துகின்றனர். இது கண்டிக்கப்பட வேண்டும்
மதுவரித் திணைக்களத்தின் அனுமதியுடன் 2020 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் ஒன்லைன் முறையில் மது விற்பனை இடம்பெற்றதாகவும் இதை எதிர்த்து தமது சங்கம் 2020 ஆகஸ்ட் மாதம் மதுவரி ஆணையர் நாயகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
மதுவரி உரிமம் பெற்று மதுபானம் விற்கும் போது பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளுக்கு அனைத்து உரிமைதாரர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள், அதில் 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்பது உட்பட பல விடயங்கள் உள்ளன .
நாட்டில் எல்லோருக்கும் ஒன்லைனில் மதுபானம் வாங்கும் திறன் இல்லை, மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும்போது அதிக விலைக்கு மதுபானம் விற்பவர்களுக்கு இது மறைமுக ஆசீர்வாதமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வருமானம் தடைப்பட்டுள்ளதால் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். ஒன்லைனில் வீட்டுக்கு வீடு மதுபானம் அறிமுகப்படுத்தப்படுவது குடும்ப தகராறுகள் மற்றும் மோதல்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த நேரத்தில் கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்துவதாகவே எமது நோக்கம் இருக்க வேண்டும். ஒன்லைனில் மதுபானம் விற்பனை செய்வது அதற்குத் தடையாக இருக்கக்கூடும் என்று சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த காரணிகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு இதனை அங்கீகரிப்பதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றனர்.
இச்சந்திப்பில் இலங்கை மதுபான உரிமம் பெற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களான சாமர ஒபயசேகர, தனஞ்சய குணசேகர, தங்கவேலு தர்மேந்திரராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(எம்.ஏ.அமீனுல்லா , அக்குறணை நிருபர்)
No comments:
Post a Comment