கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக சகலரும் குரல் கொடுக்க வேண்டும் - ஜே.வி.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக சகலரும் குரல் கொடுக்க வேண்டும் - ஜே.வி.பி

(எம்.மனோசித்ரா)

நல்லாட்சி அரசாங்கத்தால் மாணவர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டோரின் பாரிய போராட்டத்தினால் கைவிடப்பட்ட சைட்டம் முறைமையை ஒத்த உயர் கல்வி முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் முற்றுமுழுதாக உயர் கல்வி பட்டப்படிப்படை தனியார் மயப்படுத்துவதாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தொற்றின் காரணமாக பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை சகல மாணவர்களினதும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட சகலரும் வீடுகளில் முடங்கியிருக்கும் இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தினால் கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலத்தின் ஊடாக பட்டப்படிப்பை முற்று முழுதாக தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகளே காணப்படுகின்றன. மறுபுறம் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை இராணுவமயப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் இதில் காணப்படுகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் கல்வித்துறைக்கு ஏற்படுத்தப்பட்ட சீரழிவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரதும் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் சைட்டம் திட்டம் கைவிடப்பட்டது. அதே போன்று கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராகவும் சகலரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment