கூடாரங்களை கைவிட்டு மக்கள் லயன் குடியிருப்புக்கு செல்லுங்கள் : லெவண்ட் தோட்ட நிர்வாகம் மக்களுக்கு அழுத்தம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

கூடாரங்களை கைவிட்டு மக்கள் லயன் குடியிருப்புக்கு செல்லுங்கள் : லெவண்ட் தோட்ட நிர்வாகம் மக்களுக்கு அழுத்தம்

எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட லெவண்ட் தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து தமது லயன் குடியிருப்புகளுக்கு செல்லுமாறு தோட்ட நிர்வாகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி பெய்த தொடர் மழையினால் தோட்டத்தில் லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவுக்கான அறிகுறி தென்பட்டதோடு நிலத்தில் வெடிப்புக்களும் ஏற்பட்டிருந்தன. இதனால் மண்சரிவு ஏற்படக்கூடுமென அச்சத்தில் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். 

குறித்த லயன் குடியிருப்பில் 25 வீடுகளில் சுமார் 149 பேர் வரை வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தற்காலிக கூடாரங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தோட்ட மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இதுநாள்வரை தமது வாழ்க்கையை இக்கூடாரங்களில் கழித்துவருகின்றனர். 

இவ்வாறான சூழ்நிலையில் தற்பொழுது காலநிலை வழமைக்கு திரும்பியதால் மீண்டும் மக்களை பழைய லயன் குடியிருப்புக்கு செல்லுமாறும் அவ்வாறு செல்லாத விடத்து அவர்களுக்கு தோட்ட நிர்வாகம் வேலை வழங்குவதில்லை எனவும் அறிவித்தது. மக்களுக்கு எதிராக எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைபாடும் தோட்ட நிர்வாகத்தால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் தோட்ட மக்கள் மீண்டும் பழைய லயன் குடியிருப்புக்கு செல்வதில்லை என தீர்மானித்து தொடர்ந்து தமது கூடாரங்களிலேயே வசித்து வருகின்றனர். இதனால் தோட்ட நிர்வாகம் கடிதம் மூலம் அனைவருக்கும் அழுத்தத்தை பிரயோகித்துள்ளது. 

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் இலக்கம் 1 லயன் குடியிருப்பு கட்டடத்தில் மண்சரிவு அனர்த்தம் காரணமாக அங்கிருந்தவர்கள் கோவில்களிலும் சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் லயக்குடியிருப்புக்கு அருகாமையிலும் கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டனர். 

ஆனாலும் தேசிய இடர் முகாமைத்துவ நிலையத்தின் கேகாலை மாவட்ட பணிப்பாளர் காரியாலயத்தினால் மேற்காெள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் வழங்கப்பட்டுள்ள சான்றிதழில் அவ்விடம் மண்சரிவுக்கு உட்படாத பிரதேசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது நிலவி வரும் சீரான காலநிலையில் நீங்கள் முன்னர் இருந்த குடியிருப்புக்கு மீள செல்ல முடியும். 

இருந்த போதிலும் நீங்கள் கடந்த 12ஆம் திகதி அனுமதியின்றி இறப்பர் பயிர் செய்கை இடம்பெறும் தோட்டத்திற்குள் குடியிருக்க கட்டுமானப்பணிகளை தொடங்கியிருந்தீர்கள். என்னால் பல தடவை உங்களுக்கு எச்சரிக்கை விடுத்தபோதும் அதனை கருத்திற்கொள்ளாது மீண்டும் 13ஆம் திகதி கட்டுமான பணிகளை மீள்புதிப்பித்து ஒவ்வொரு இடங்களாக வீடுகள் கட்ட முயற்சி செய்துள்ளீர்கள்.

இவ்வாறு தோட்ட நிர்வாகத்தின் அறிவித்தலை உதாசீனப்படுத்தி அரசிற்கு சொந்தமான கௌனிவெளி பெருந்தோட்ட கம்பனியால் நிர்வகிக்கப்படும் தோட்டத்துக்குள் அனுமதியின்றி வீடுகள் கட்டப்படுகின்றது. தோட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியற்ற கட்டுமானத்தை தகர்த்தி விட்டு தோட்ட நிலங்களை விட்டு வெளியேறுமாறு பல தடைவை எச்சரிக்கை விடுத்தும் அதனை கருத்திற் கொள்ளாது செயற்படுகின்றீர்கள். எனவே மீண்டும் பழைய குடியிருப்புக்கு செல்லும் காலம் வரை சம்பளமற்ற தொழில் நிறுத்தம் செய்யப்படுவதை அறியத்தருகின்றேன்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறாக தோட்ட நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டுள்ளதால் தோட்ட வருமானத்தை இழந்து மக்கள் தவிக்கின்றனர்.

லயன் குடியிருப்பு அருகாமையில் மண்சரிவு அபாயம் இல்லையென சான்றுப்படுத்தப்பட்டாலும் தாம் வசித்து வந்த லயன் குடியிருப்பு மிகவும் பழமை வாய்ந்ததாகவும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமக்கு அரசாங்கத்தால் புதிய வீடமைப்பு கிடைக்கும்வரை இதே இடத்தில் இருக்கபோவதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

(அவிசாவளை நிருபர்)

No comments:

Post a Comment