எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்கிறது நெதர்லாந்து மீட்பு நிறுவனம் : முழு கப்பலும் படிப்படியாக கடலில் மூழ்கும் அபாயம் ? - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்கிறது நெதர்லாந்து மீட்பு நிறுவனம் : முழு கப்பலும் படிப்படியாக கடலில் மூழ்கும் அபாயம் ?

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீ பரவலுக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பலை ஆள் கடலுக்கு இழுத்து செல்ல ஆரம்பித்ததைத் தொடர்ந்து அதன் பின் பகுதி கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது. 

விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஊடாக நேற்று எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் ஊடாக இக்காட்சிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கப்பலை ஆழ் கடல் நோக்கி இழுத்து செல்லும் நடவடிக்கை, 10 ஆவது கடல் மைல் தூரத்திலேயே தடைப்பட்டுள்ளது.

ஆள் கடலை நோக்கி குறித்த சரக்குக் கப்பலை இழுத்து செல்ல முற்பட்டபோது, அக்கப்பலின் பின் பக்கத்தின் அடிப்பகுதி, கடலின் தரையில் தட்டியதால் தொடர்ந்து ஆழ் கடலை நோக்கி கப்பலை இழுத்து செல்வது நிறுத்தப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கேசரியிடம் தெரிவித்தார்.

'கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுத்து செல்ல மீட்பு நிறுவனம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கினோம். எனினும் கப்பலை அவ்வாறு இழுத்து செல்லும் போது கப்பலின் பின் பக்க அடிப்பகுதி, கடலின் தரையில் தட்டியது. நேற்று பணிகளை ஆரம்பித்து சுமார் 500 மீற்றர்கள் வரை மட்டுமே கப்பலை இழுத்து செல்ல முடியுமாக இருந்தது. அதன்படி தற்போது குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ளது. இதனைவிட சொல்வதானால் போபிட்டிய கடற்கரையிலிருந்து கப்பல் 6 கடல்மைல் தொலைவில் உள்ளது.' என கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் தற்போது கப்பலின் பின் பக்கத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கியுள்ளதுடன் முழு கப்பலும் படிப்படியாக கடலில் மூழ்கும் அபாயம் நேற்று மாலையாகும் போது அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னனியில் குறித்த கப்பல் தொடர்பில் முன்னெடுக்க முடியுமான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில், கப்பல் மீட்புப் பணிக்கு பொறுப்பான நெதர்லாந்தை சேர்ந்த மீட்பு நிறுவன அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

கப்பலினுல் நீர் நிரம்பி வருவதால், அது தொடர்பில் எடுக்க முடியுமான நடவடிக்கைகள் தொடர்பில் நெதர்லாந்து மீட்புக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக குறித்த கப்பலின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான எம்.ரி.ஐ. தனியார் நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பணிப்பாளர் அன்று ஹீலி தெரிவித்துள்ளார்.

தீ பரவலுக்குள்ளான கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

அனர்த்தத்திற்குள்ளான கப்பல் மூழ்கும் அபாயம் இருப்பதாக கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அப்படி நிகழ்ந்தால், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்பது அவர்களின் முன்மொழிவாக இருந்தது.

அதன்படி, தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

சிங்கப்பூரியிலிருந்து பயணத்தை ஆரம்பித்திருந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், பின்னர் மலேஷியா சென்று அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தது. அங்கிருந்து கடந்த மே 9 ஆம் திகதி பயணத்தை தொடர்ந்த அக்கப்பல் கட்டார், இந்தியா துறைமுகங்களுக்கு சென்ற பின்னர் கடந்த மே 19 ஆம் திகதி இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தூரத்தில் நங்கூரமிடப்ப்ட்டிருந்தது. இதன்போதே அதில் தீ பரவல் ஆரம்பித்திருந்தது.

சீன தயாரிப்பான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலானது கடந்த ஜனவரி மாதமே தனது சேவையை ஆரம்பித்திருந்தது. 186 மீற்றர் நீளமும், 34 மீற்றர் அகலமும் கொண்ட இந்த கப்பல், மத்திய கிழக்கிலிருந்து சிங்கப்பூர் நோக்கி இரசாயணப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 1486 கொள்கலன்களை எடுத்து செல்லும் போது இந்த தீ விபத்துக்கு முகம் கொடுத்துள்ளது. 

2700 கொள்கலன்களை ஏற்றிச் செல்ல முடியுமான இந்த சரக்குக் கப்பல், தற்போது தீ பரவல் காரணமாக சம்பூரணமாக சேதமடைந்துள்ள நிலையில், அது குறித்து கப்பல் காப்புறுதி நிறுவனத்துக்கு (லண்டனில் உள்ள காப்புறுதி நிறுவனம்) அறிவித்துள்ளதாகவும் கப்பல் நிறுவனம் குறிப்பிடுகிறது.

எவ்வாறாயினும் தற்போது கப்பல் கடலில் மூழ்கும் நிலையில், அவ்வாறு மூழ்குவதன் ஊடாக பாரிய சூழல் பாதிப்பை ஏதிர்கொள்ள நேரிடலாம் என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையினர் எச்சரிக்கின்றனர்.

குறித்த கப்பலில் சுமார் 278 தொன் எரிபொருள் இருப்பதாக நம்பப்படும் நிலையில், கப்பலிலிருந்து எரிபொருள் கசிவு ஏற்படுமாக இருந்தால், அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த அதிகார சபை கூறுகின்றது.

No comments:

Post a Comment