அத்தியாவசிய சேவை ஊழியர்களை தேடி வரும் பொலிசார் : சேவைக்கு அழைக்கப்படவில்லை என கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

அத்தியாவசிய சேவை ஊழியர்களை தேடி வரும் பொலிசார் : சேவைக்கு அழைக்கப்படவில்லை என கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை

கடிதங்களைக் காட்டி வேலைக்குச் சென்ற அத்தியாவசிய சேவை ஊழியர்களை பொலிசார் தேடி வருகின்றனர். நேற்றைய தினம் சேவை அழைப்புக் கடிதங்களுடன் கொழும்புக்கு வந்த அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள், தங்கள் அலுவலகங்களில் கடமையில் இருந்தார்களா என்பதை அறிய பொலிசார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளில் வேலை செய்வதாகக்கூறி நேற்று பலர் நிறுவன அடையாள அட்டைக்கு மேலதிகமாக நிறுவனத் தலைவரின் கடிதங்களுடன் வந்திருந்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர்களிடமிருந்த கடிதங்கள், ஒழுங்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளதாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மஹரகம, கல்கிஸ்ஸ, வத்தளை, களனி மற்றும் பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள பொலிஸ் வீதித் தடைகளில், தங்களை அத்தியாவசிய சேவையாளர்கள் என்று அறிமுகப்படுத்தி வந்த கிட்டத்தட்ட ஆயிரம் பேரிடமிருந்த சேவை அழைப்பு கடிதங்களின் புகைப்படங்களை பொலிசார் எடுத்துள்ளனர்.

இந்த கடிதங்களுக்கமைய குறித்த நபர்கள், நேற்றைய தினம் சேவையில் இருந்தார்களா? இல்லையா? என்பதை கண்டறிய பொலிசார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன் மூலம் குறித்த நபர் சேவைக்கு அழைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டால் அல்லது அவர் சேவையில் இருக்கவில்லை என்றால் கடிதத்தை வழங்கிய நபர், மோசடி ஆவணங்கள் மற்றும் அவர் வேலைக்குச் செல்வதாக தவறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment