(எம்.மனோசித்ரா)
இந்தியாவிடமிருந்து தற்போது அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. எனவே பிரித்தானியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதற்கு சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை. எவ்வாறிருப்பினும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு முதல் 6 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தடுப்பூசி பற்றாக்குறை என்பது இலங்கையில் மாத்திரமல்ல உலகலாவிய ரீதியில் காணப்படுகிறது. எனவேதான் உலக சுகாதார ஸ்தாபனத்தினால்கூட உறுதியளிக்கப்பட்டவாறு எமக்கான தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
12,64,000 அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளும், 11 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளும் இதுவரையில் முழுமையாக கிடைக்கப் பெற்றுள்ளன. சைனோபார்ம் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய 13 இலட்சம் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இவற்றில் முதற்கட்டமாக எதிர்வரும் 6 ஆம் திகதி ஒரு மில்லியன் தடுப்பூசிகளையும், 9 ஆம் திகதி மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக சைனோபார்ம் நிறுவனம் உறுதியளித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment