பள்ளிவாசல் ஒலி பெருக்கி கட்டுப்பாடு : நியாயப்படுத்தும் சவூதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

பள்ளிவாசல் ஒலி பெருக்கி கட்டுப்பாடு : நியாயப்படுத்தும் சவூதி

பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியின் ஒலி குறித்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளை சவூதி அரேபிய நிர்வாகம் நியாயப்படுத்தியுள்ளது. 

பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளின் ஒலி அதன் உச்ச அளவு ஒலியில் மூன்றின் ஒன்றாக மாத்திரம் அமைக்கப்பட வேண்டும் என்று சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சு கடந்த வாரம் அறிவித்தது.

பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்லாமிய விவகார அமைச்சர் அப்துல் லதீப் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பழைமைவாத இஸ்லாமிய நாடான சவூதியில் இந்த நடவடிக்கைக்கு எதிராக சமூக ஊடகங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

எனினும் ஒலி பெருக்கியால் தமது குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்களிடம் இருந்தும் முறைப்பாடு கிடைத்திருப்பதாக ஷெய்க் தெரிவித்துள்ளார். 

அரச ஊடகம் வெளியிட்ட வீடியோ உரை ஒன்றில், தொழ வேண்டியவர்கள் இமாம் தொழுகைக்காக அழைக்கும் வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை என்று ஷெய்க் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவை இணையதளத்தில் எதிர்ப்பவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்றும் மக்கள் கருத்தை தூண்ட முற்படுபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் மக்கள் வாழ்வில் மதத்தின் செல்வாக்கை குறைத்து நாட்டை மிதவாத போக்கிற்கு இட்டுச் செல்லும் அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் தொடர்ச்சியான முயற்சியின் ஓர் அங்கமாகவே இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது போன்ற பல சமூகக் கட்டுப்பாடுகளும் சவூதியில் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

எனினும் நாட்டில் கருத்துச் சுதந்திரத்தையும் அவர் ஒடுக்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. அரசை விமர்சிக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment