மீராவோடை, மாஞ்சோலை முடக்கமும் : மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளும் - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

மீராவோடை, மாஞ்சோலை முடக்கமும் : மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளும்

கொரோனா நெருக்கடி மிக்க இக்காலகட்டத்தில் சுகாதாரத் தரப்பினர்களினதும், பாதுகாப்பு முப்படைகளினதும், ஏனைய அரச உத்தியோகத்தர்களினதும் அர்ப்பனிப்பான சேவைகள் பாராட்டத்தக்கதும் மெச்சத்தக்கதுமாகும்.

இறைவன் அவர்களது தேகாரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உளத்தூய்மையோடு அவர்கள் சேவையாற்ற இத்தருணத்தில் நாம் பிரார்த்திக்கின்றோம்.

நேற்றைய தினம் (11.06.2021 வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மீராவோடை, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் காலவரையறையின்றி முடக்கப்பட்டிருப்பதாக சமூக மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடாக அறியக்கிடைக்கின்றது.

மக்களின் பாதுகாப்புக்கருதி சில வேளைகளில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு அரசு இயந்திரங்கள் தள்ளப்படுகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. என்றாலும் சில முடிவுகளை எடுக்கும்போது முன்கூட்டியே திட்டமிடலும் அவசியம் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் இப்பிரதேசங்களை முடக்குகின்ற போது ஏற்கனவே பல வாரங்களாக பயணத்தடையிலுள்ள இப்பிரதேசம் மீண்டும் முடக்கம் எனும் வேறு பெயரால் அழைக்கப்பட்டு அன்றாட தினக்கூலிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. (பயணத் தடைக்கும் முடக்கத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன என்பது இன்னும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை என்பது வேறு விடயம்)

இப்பிரதேசத்தில் வசிக்கும் அனேகமானோர் அன்றாடக்கூலித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டவர்களாகும்.

ஏற்கனவே ஒரு வாரம் தான் பயணத்தடை என ஆரம்பித்த கட்டுப்பாடு நான்காவது வாரமாக தொடர் கதையாகப் போய்கொண்டிருக்கின்றது.

இது எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்படுமா? இல்லையா? என்ற சந்தேகத்திற்கு மத்தியில் மீண்டும் காலவரையறையின்றிய முடக்கம் திட்டமிடலில் அரச இயந்திரங்களின் குறைபாட்டை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் கொரோனாவினால் தான் மக்கள் மரணிக்கக்கூடாது. ஆனால், பசி பட்டினியால் இறந்தால் பரவாயில்லை என அரசு இயந்திரங்கள் நினைத்துச் செயற்படுகின்றதா? என எண்ணத் தோன்றுகின்றது.

மேலும், குறிப்பிட்டவொரு பகுதியில் ஒரு நோயாளி அடையாளம் காணப்படுகின்ற போது, அப்பகுதி அல்லது அப்பாதை மாத்திரமே முடக்கப்படும் என ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.

ஆனால், இங்கு மாத்திரம் அனைத்துப் பிரதேசமும் அதாவது மீராவோடை, மாஞ்சோலை ஆகிய ஒட்டுமொத்த கிராமமும் முடக்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இவ்வாறானதொரு சில செயற்பாடுகள் இத்தரப்பினர்கள் மீதான மக்களின் நல்லெண்ணங்களில் சிறு கரும்புள்ளியாக அமைந்து விடுகின்றது.

எனவே, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது மக்களின் பிரச்சினைகள் சார்பாகவும் எதிர்கொண்டுள்ள இடர் சார்பாகவும் தீர்வுகளை காணக் கூடியவாறு திட்டங்களை வகுத்தால் பொது மக்களுக்கும் அரசு இயந்திரங்களுக்மிடையே எந்த முரண்பாடும் வராமல் பாதுகாக்கலாம் என்பதே எமது அபிப்பிராயமாகும்.

எனவே முடக்கப்பட்டிருக்கும் இப்பிரதேசத்துக்கு என்ன வகையான திட்டங்களை அரசு முன்னெடுக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

MLA.Samad (BBA), (JP)

No comments:

Post a Comment