பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி டெங்கு வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு : 77 சதவீதம் பலன் - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி டெங்கு வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு : 77 சதவீதம் பலன்

பாக்டீரியா தொற்றிய கொசுக்களைப் பரப்பி டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் 77 சதவீதம் டெங்கு பரவல் கட்டுப்படுவது தெரியவந்துள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

வோல்பாசியா என்ற இந்த 'அற்புத' பாக்டீரியா தொற்றிய கொசுக்களிடம் டெங்கு கிருமியை பரப்பும் தன்மை கணிசமாகக் குறைகிறது.

இந்த பரிசோதனை இந்தோனீசியாவில் இருக்கும் யோக்யகர்தா நகரத்தில் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு வைரஸை இது முற்றாக ஒழிக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பரிசோதனை விரிவுபடுத்தப்படுகிறது.

உலகம் முழுவதையும் பாடாய்ப் படுத்தும் டெங்கு வைரசுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம் என உலக கொசு திட்ட அணியினர் கூறுகிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன் வெகு சிலர் மட்டும் டெங்கு வைரஸ் குறித்து கேள்விப்பட்டிருந்தனர், ஆனால் இப்போது இது இடைவிடாமல் மெதுவாகப் பரவும் பெருந்தொற்றாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

1970ம் ஆண்டு உலகில் மொத்தம் ஒன்பது நாடுகளில் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவியது. தற்போது ஆண்டுக்கு 40 கோடி பேர் டெங்கு வைரசால் பாதிக்கப்படுகிறார்கள்.

டெங்கு தொற்றியவர்களுக்கு எலும்பிலும், தசைகளிலும் கடுமையான வலி உண்டாகும். டெங்கு அதிக அளவில் பரவத் தொடங்கினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் குவியத் தொடங்கிவிடும்.

எதிரிக்கு எதிரி
இந்த பரிசோதனையில் வோல்பாசியா (Wolbachia) பாக்டீரியா தொற்றிய கொசுக்கள் பயன்படுத்தப்பட்டன. இவை இயற்கையாகவே அற்புதத் தன்மை கொண்டவை என ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் கேட்டி ஆண்டர்ஸ் கூறுகிறார்.

வோல்பாசியா பாக்டீரியா கொசுக்களுக்கு தீங்கு விளைவிக்காது, ஆனால் கொசுக்களின் உடலில் எந்த பகுதியில் டெங்கு வைரஸ் குடியேறுமோ, அந்த இடங்களில் எல்லாம் இந்த வோல்பாசியா பாக்டீரியா சென்று அமர்ந்து கொள்ளும்.

பாக்டீரியா தான் இருக்கும் இடத்துக்காக வைரசோடு போட்டியிடுகிறது, அந்த பாக்டீரியாவை வெளியே தள்ளி, அந்த இடத்தை பிடிக்க டெங்கு வைரசுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே கொசு கடிக்கும்போது டெங்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இந்த பரிசோதனையில் வோல்பாசியா தொற்றிய 50 லட்சம் கொசு முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை கொசு முட்டைகள் நகரில் தண்ணீர் இருக்கும் வாளிகளில் வைக்கப்பட்டன. கொசு கூட்டத்தில் பாக்டீரியா தொற்றிய கொசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆயின.

யோக்யகர்த்தா நகரம் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் பாதியில் மட்டுமே கொசுக்கள் விடுவிக்கப்பட்டன.

'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' என்கிற அறிவியல் சஞ்சிகையில், இந்த பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. கொசுக்கள் விடுவிக்கப்பட்ட பிறகு டெங்கு தொற்று 77 சதவீதம் குறைவாகப் பதிவானது. அதேபோல டெங்கு தொற்றியவர்கள் மத்தியிலும் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நோய் முற்றியவர்கள் எண்ணிக்கையும் 86 சதவீதம் குறைந்திருப்பதாக அப்பரிசோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இது மிகவும் உற்சாகமளிக்கிறது. உண்மையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த பரிசோதனை முடிவுகள் சிறப்பாக வந்திருக்கின்றன" என்று ஆண்டர்ஸ் கூறினார்.

டெங்கு வைரசைக் கட்டுப்படுத்தும் இந்த முறை மிக சிறப்பாக இருக்கிறது, கொசுக்கள் நகரம் நெடுகிலும் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் இத்திட்டம், டெங்குவை ஒழிக்கும் நோக்கத்துடன் அப்பிராந்தியத்தின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

"இந்த முடிவுகள் அற்புதமானவை" என உலக கொசு திட்ட அமைப்பின், தாக்க மதிப்பீட்டு பிரிவின் இயக்குநராக இருக்கும் டாக்டர் ஆண்டர்ஸ் கூறினார்.

"டெங்கு வைரஸ் ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாக இருக்கும் பெரிய நகரங்களில் இம்முறை பயன்படுத்தப்படும் போது, இது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறோம்."

வோல்பாசியா, தான் குடியிருக்கும் கொசுக்களின் இனபெருக்கத் தன்மையை மாற்றியமைக்கும். இதன் மூலம் கொசுக்களின் அடுத்த தலைமுறைக்கும் இந்த பாக்டீரியா கொண்டுசெல்லப்படும்.

அதாவது ஒரு முறை வோல்பாசியா பாக்டீரியா கொசுக்களின் உடலில் அமர்ந்துவிட்டால், அது நீண்ட காலத்துக்கு ஒட்டிக்கொண்டு, டெங்கு தொற்றை ஏற்படவிடாமல் பாதுகாப்பு வழங்கும்.

இது மற்ற கட்டுப்பாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கொசுக்களை அடக்குவதற்கு பூச்சிக் கொல்லிகள் அல்லது அதிக எண்ணிக்கையிலான மலட்டு ஆண் கொசுக்களை விடுவித்தல் போன்ற வழிமுறைகளை மேற்கொள்வதென்றால் தொடர்ந்து அது போன்ற பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

"இந்த பரிசோதனையின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என யோக்யகர்தா நகரத்தின் நோய் தடுப்புத் தலைவர் மருத்துவர் யூடிரியா அமெலியா கூறினார்

"இந்த வழிமுறையை யோக்யகர்த்தாவின் அனைத்து பகுதிகளுக்கும், இந்தோனீசியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரிவாக்க முடியும் என நம்புகிறோம்." என்றார் அவர்.

டெங்கு வைரசைப் பரப்பும் ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) வகை கொசுவுக்கு பொதுவாக வோல்பாசியா நோய்த் தொற்று ஏற்படாது. எனவே பல ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் பரிசோதனை வெற்றி அடைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

வோல்பாசியா டெங்கு காய்ச்சலை முழுமையாக நசுக்க போதுமானதாக இருக்கும் என நோய் மாதிரி ஆய்வுகள் கணித்துள்ளன.

ஜிகா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் சிக்கன்குனியா போன்ற பிற நோய்களும் கொசு கடியால்தான் பரவுகின்றன. அந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதில் கூட இந்த முறை ஒரு தீர்வாக அமைய வாய்ப்பிருக்கிறது என பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உலக சுகாதாரம் மற்றும் மருத்துவ பேராசிரியர் டேவிட் ஹமர் கூறுகிறார்.

பிபிசி தமிழ்

No comments:

Post a Comment