சமூக வலைத்தள கைதுகளுக்கான அதிகாரம் கண்டிக்கதக்கது, அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

சமூக வலைத்தள கைதுகளுக்கான அதிகாரம் கண்டிக்கதக்கது, அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

(நா.தனுஜா)

கொவிட்-19 நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் ஒற்றுமையின்மை, வெறுப்பைத் தோற்றுவிக்கும் போலிச் செய்திகள், புகைப்படங்கள், காணொளிகளைப் பகிர்வோரைக் கைது செய்யும் அதிகாரம் குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கணனி குற்றப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்கான இந்தச் சட்டம் அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்திருக்கிறது.

கொவிட்-19 நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் ஒற்றுமையின்மை, வெறுப்பு போன்றவற்றைத் தோற்றுவிக்கும் போலிச் செய்திகள், புகைப்படங்கள், காணொளிகளின் பகிரல் தொடர்பில் பொலிஸாரினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது சமீபத்திய கொவிட்-19 நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் ஒற்றுமையின்மை, வெறுப்பு போன்றவற்றைத் தோற்றுவிக்கும் போலி செய்திகள், புகைப்படங்கள், காணொளிகளின் பகிரல் என தலைப்பிடப்பட்டு அண்மையில் இலங்கை பொலிஸினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட சுற்றுநிருபமானது உரிய விதிகளை மீறுவோருக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில், இணைய நடவடிக்கைகளைக் கண்காணிப்பதன் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரம் இலங்கை பொலிஸின் குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கணனி குற்றப் பிரிவுக்கு வழங்கப்படுகின்றது என்ற எச்சரிக்கையைக் குறித்த சுற்றுநிருபம் உள்ளடக்கியிருந்தது.

அவதூறு மற்றும் வன்முறைத்தூண்டல்களுடன் தொடர்புடைய சம்பவங்களின்போது உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் அபிப்பிராயபேதங்கள் மற்றும் விமர்சனங்களை கண்ணியமான முறையில் வெளிப்படுத்தும் போது, சம்பந்தப்பட்டவர்களின் குரல்வளையை நெரிப்பதற்காகக் குறித்த சட்டங்கள் பயன்படுத்தப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

மேலும் எது உண்மையான அல்லது போலியான செய்தி என்பதனை தீர்மானிப்பதற்கும், அவர்களது உள்ளார்ந்த தீர்மானங்களின்படி சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் பொலிஸ் உள்ளிட்ட நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இச்சட்டத்தின் மூலம் அனுமதி வழங்கப்படுகின்றமை விசனத்திற்குரிய விடயமாகும்.

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்காக சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களை சில பொலிஸ் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தலாம் என்பதில் நாம் ஆழமான கரிசனையைக் கொண்டிருக்கிறோம்.

கொவிட்-19 தொற்றுப் பரவலின் விளைவாக நாடானது பயணக்கட்டுப்பாட்டின் கீழிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டிற்கான சுதந்திரமும் அபிப்பிராயபேதங்களை வெளிப்படுத்துவதற்கும் மறுப்புத் தெரிவிப்பதற்கும் காணப்படும் சுதந்திரமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

கடுமையான விமர்சனம் அல்லது அபிப்பிராயபேதத்தினை வெளிப்படுத்தியமைக்காகக் கைது செய்யப்படுவதற்கும் எந்தவொரு முறைப்பாட்டினதும் முழுமையான விசாரணைக்கு முன்னதாகவே 'போலிச் செய்தி' எனப்படும் குற்றத்திற்காக ஒருவர் கைது செய்து தடுத்து வைக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதானது பிரஜைகள் சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் விமர்சனப் பார்வைகளை வெளிப்படையாக பகிர்வதற்கான சுதந்திரம் அல்லது முக்கியமான விடயங்களின் மீது சுதந்திரமாக கருத்து வெளிப்படுத்தலுக்கான சுதந்திரம், அதியுச்ச பாதுகாப்பு ஆகியவற்றை இல்லாதொழிக்கக்கூடியதான தீயவிளைவை தன்னகத்தே கொண்டதாகவே அமைத்துள்ளது.

மேலும் பிடியாணையின்றி கைது செய்வதற்கான எந்தவொரு முடிவையும் நாடத்தலைப்படுவதானது ஜனநாயகப் பண்புகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்டவற்றை அடக்குவதற்கோ அல்லது நசுக்குவதற்கோ வழிவகுக்கக்கூடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

சட்டம் அனுமதித்த வகையில் உண்மையான மற்றும் காரணகாரியத்துடன் குற்றஞ்சாட்டுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படும் அதேவேளை, தேவைப்படுமிடத்து சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் எந்தவொரு நபரையும் கைது செய்வதென்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க விடயமாகும். சட்ட அமுலாக்கமானது நியாயமானதாகவும் சமத்துவமானதாகவும் தெரிவிற்கு அப்பாற்பட்டதாகவும் கையாளப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad