உர உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கும் உள்நாட்டில் தயாரிப்பதற்கும் நடவடிக்கை : அனைத்து கமநல சேவைகள் மத்திய நிலையங்களுக்கும் மண் வளத்தைப் பரிசோதனை செய்யும் உபகரணங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

உர உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கும் உள்நாட்டில் தயாரிப்பதற்கும் நடவடிக்கை : அனைத்து கமநல சேவைகள் மத்திய நிலையங்களுக்கும் மண் வளத்தைப் பரிசோதனை செய்யும் உபகரணங்கள்

பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளையை உற்பத்தி செய்வதை துரிதப்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. உர உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள் எவை என்பது பற்றி ஆராய்ந்து, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் உள்நாட்டில் தயாரிக்க முடியுமான இயந்திரங்களை அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும் இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவின் பங்களிப்புடனும் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில், ஜனாதிபதி அலுவலகத்தில் (02) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

உர உற்பத்தியை உள்ளூராட்சி நிறுவனங்களின் மட்டத்தில் மேற்கொள்வது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்த நிறுவனங்களுக்கு தொழிநுட்ப அறிவை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார். 

சேதனப் பசளை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கிராமிய சூழலிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் கிராமங்களின் தூய்மையையும் அழகையும் பேண முடியும் என்பதுடன், சமுர்த்தி உதவி பெறுநர்களை இதற்கு பங்களிக்கச் செய்வதன் மூலம், புதிய கிராமிய பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்ப முடியுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனினும், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் ஆரோக்கியமான, உற்பத்தித்திறன் வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட்டபோதும், அது சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல என உலகில் பலரும் கூறினர். சேதனப் பசளை நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலும் அத்தகைய கருத்தே உள்ளது. அதனை வெற்றி கொள்வது யுகத்தின் தேவையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு விவசாயிகளுக்குத் தேவையான சேதனப் பசளையை போதுமானளவு தட்டுப்பாடு இன்றி கிடைக்கச் செய்வது கட்டாயமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்குத் தேவையான முழுமையான சேதனப் பசளையை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும், பற்றாக்குறைகள் ஏற்படுமாயின் விநியோகிக்கப்பட வேண்டிய சேதனப் பசளையின் அளவை அரசாங்கத்தின் மூலம் இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைப்பதாகவும், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு சேதனப் பசளையை விநியோகிக்கும்போது, மண் வளம் பற்றி பரிசோதனை செய்து, தேவையான அளவை மட்டும் பரிந்துரைப்பதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றையும் அதற்காக மண் வளத்தை பரிசோதிப்பதற்குத் தேவையான உபகரணங்களையும் நாட்டில் உள்ள அனைத்து கமநல சேவைகள் மத்திய நிலையங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மேலும் தெரிவித்தார்.

சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில், விவசாயிகளுக்குத் தேவையான தொழிநுட்ப அறிவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். சேதனப் பசளைப் பயன்பாடு குறித்து அறிவூட்டுவதற்கு எழுத்து மூலமான வழிகாட்டல்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மண் வளத்தைப் பரிசோதனை செய்யும் உபகரணங்கள், கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் விவசாய பணிப்பாளர் நாயகத்திற்கும் உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டன.

இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் விவசாயத்துறை அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment