ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை பகுதிகளுக்கு உட்பட்ட தோட்டங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி உரிய முறையில் பெற்றுக் கொடுப்பதற்கு அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துகொடுப்பதற்கு பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கையெடுத்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் முதல், இரண்டாம் கட்டம் அடிப்படையில் ஒரு இலட்சம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் மிக விரைவாக இடம்பெற்று வருகிறது.
பெருந்தோட்டங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணி இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தோட்டப்புறங்களில் வசிக்கும் முதியவர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள அமைக்கப்பட்டுள்ள உரிய மையங்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
எனவே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், உரிய தோட்ட முகாமையாளர்களுடன் கலந்துரையாடல் நடாத்தி முதியவர்களை தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து வசதிகளை தோட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாகவே தோட்டப்புற முதியவர்களை ஆர்வத்துடன் தடுப்பூசித் திட்டத்தில் பங்குபெற செய்ய முடியுமென நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ள செந்தில் தொண்டமான், பெருந்தொட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசி திட்டத்தில் முழுமையாக அம்மக்கள் பயன்பெற ஒத்துழைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment