பாரம்பரிய கட்டிடங்கள், காணிகளை வெளிநாட்டவர்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது : முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

பாரம்பரிய கட்டிடங்கள், காணிகளை வெளிநாட்டவர்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது : முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பில் இருக்கும் பழைமை வாய்ந்த பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் காணிகளை செலன்திவா முதலீட்டு நிறுவனத்துக்கு கீழ் கொண்டுவந்து, வெளிநாட்டவர்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் நாட்டில் இருக்கும் பெறுமதி வாய்ந்த காணிகள் மற்றும் கட்டிடங்களை அபிவிருத்தி செய்கின்றதா அல்லது அரசாங்கத்துக்கு தேவையான முதலீட்டு நிறுவனங்களுக்கு நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு வழங்கப்படுகின்றதா என்ற அச்சுறுத்தலுக்கு நாடு முகம்கொடுத்து வருகின்றது. 

அரசாங்கம் செலன்திவா இன்வஸ்ட்மன் பிரைவட் லிமிட்ட என்ற முதலீட்டு நிறுவனம் ஒன்றை அமைத்து கொழும்பில் இருக்கும் பெறுமதி வாய்ந்த பாரம்பரிய கட்டிடங்களை அதன் கீழ் கொண்டுவந்து, அவற்றை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நபர்களுக்கு குத்தகைக்கு அல்லது உரித்துரிமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு நகரில் இருக்கும் மிகவும் பழைமை வாய்ந்த கிரேன்ஹோட்டல், கோர்க் கட்டிடம், கபூர் கட்டிடம், வெளிவிவகார அமைச்சு அமைந்திருக்கும் கட்டிடம், தபால் தலைமையகம் இவற்றை செலன்திவா முதலீட்டு நிறுவனத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று ஹில்டன் ஹோட்டல், மக்கள் வங்கியை வேறு பிரதேசத்துக்கு இடமாற்றி அதன் பெறுமதி வாய்ந்த காணி, கொம்பனிதெரு பொலிஸ் நிலையம், அந்த பிரதேசத்தில் இருக்கும் விமானப்படைக்கு சொந்தமான மிகவும் பழைமை வாய்ந்த விளையாட்டு மைதானம் இவை அனைத்தையும் முதலீட்டு நிறுவனங்களுக்கு கொண்டுவந்து வெளிநாட்டவர்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

எனவே நாடு பொருளாதார ரீதியில் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. வெளிநாட்டு கையிருப்பு போதுமானளவு இல்லை. டொலர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் அன்று போட் சிட்டியை சீனாவுக்கு வழங்கியதுபோல், கொழும்பில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்களை சீனாவுக்கு வழங்குவதற்கான திட்டமாகவே இந்த பாரம்பரிய கட்டிடங்களை செலன்திவா என்ற முதலீட்டு நிறுவனத்துக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment