காபனிக் பசளை என தெரிவித்து சீன நகர கழிவுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம் : ரஞ்சித் மத்தும பண்டார - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

காபனிக் பசளை என தெரிவித்து சீன நகர கழிவுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம் : ரஞ்சித் மத்தும பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம்)

காபனிக் பசளை என தெரிவித்து சீன நகர கழிவுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் பாரிய ஆபத்துக்களுக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

காபனிக் பசளையாக சீன நகர கழிவுகளை அரசாங்கம் இறக்குமதி செய்ய எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்கத்தின் திட்டமிடப்படாத முடிவுகளால் விவசாய உற்பத்திக்கு பாரிய ஆபத்து நேரிட்டுள்ளது. இரசாயனப் பசளைகளின் இறக்குமதிகளை கைவிட எடுத்த தீர்மானத்தால் நெல் அறுவடை மற்றும் சிறு உற்பத்தி அறுவடைத் துறைக்கு பாரிய ஆபத்து நேரிட்டுள்ளது. 

தற்போது விவசாயிகள் அவர்களுக்கு தேவையான இரசாயனப் பசளை இல்லை என தெரிவித்து போராட்டங்களை மேற்கொள்ளும்போது, இரசாயன பசளைக்கு பதிலாக காபனிக் பசளையை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது.

அரசாங்கம் இரசாயனப் பசளைக்குப் பதிலாக காபனிக் பசளை இறக்குமதி செய்ய எடுத்திருக்கும் நடவடிக்கை பிரிதொரு சிக்கலை உருவாக்கியுள்ளது. சீன நகர கழிவுகளை காபனிக் பசளைகளாக இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவ்வாறு அரசாங்கம் முடிவெடுக்குமாக இருந்தால் அதன் ஆபத்துகளின் பின்விளைவுகள் பலவற்றிற்கு முகம் கொடுக்க நேரிடும் துறைசார் நிபுணர்கள் தற்போதே சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அரசாங்கம் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞான ரீதியிலான தீர்மானங்களையும் சுகாதார தரப்பின் வழிகாட்டல்களையும் புறமொதுக்கியதால், அடுத்த தலைமுறையினரும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. 

அதேபோன்று இரு துறைமுகங்கள் அனுமதிக்காத கப்பலை எங்களுடைய சமுத்திர வலயத்திற்குள் நுழைய அனுமதித்ததன் காரணமாக சமுத்திர வலயத்திற்குள் எண்ணிப்பார்க்க முடியாத பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதனால் தற்போது சீனா போன்ற நாட்டிலிருந்து காபனிக் பசளையாக நகர் புற கழிவுகள் இறக்குமதி செய்வது, நிலத்திற்கு மாத்திரமல்லாது மனிதர்களை பாதிக்கும் பக்டீரியாக்கள் கூட தாக்குவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்கமாட்டோம் என்பதற்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன? 

இந்த வேலைத்திட்டத்தையும் தமது நெருங்கிய நண்பர்களுக்கு வழங்கியுள்ளதால் இதன் நோக்கம் சரியாக வெளிப்படுகிறது. சீனக் குப்பைகளை நாட்டிற்கு கொண்டு வந்தேனும் தனது நெருங்கிய நண்பர்களின் எதிர்கால பொருளாதார நலன்களை வலுப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad