ஊர்காவற்றுறையில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, June 21, 2021

ஊர்காவற்றுறையில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை தம்பாட்டி பிரதேசத்தில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தீர்வு காணப்பட்டுள்ளது.

தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், தம்பாட்டி கடற்றொழிலாளர்களிடம் கடலுணவுகளை கொள்வனவு செய்யும் வர்த்தகர்களுக்கும் இடையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளமையினால், சங்கத்தினை புனரமைப்பு செய்து புதிய நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் புதிய நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் கடலுணவு வர்த்தகர்களினால் குறித்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாக தெரிவுகளை தள்ளிப் போடுவது தொடர்பாக வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடியமையை சுட்டிக்காட்டியதுடன், புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் வரையில், கடலுணவு வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் மேற்பார்வையில் மேற்கொள்வது சிறந்தது என்ற கருத்தை முன்வைத்தார். குறித்த கருத்து சம்மந்தப்பட்ட தரப்புக்களினால் ஏற்றுக் கொண்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற கலந்துரையாடலில், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி, ஊர்காவற்துறை பிரதேச சபை தலைவர் ஜெயகாந்தன் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment