பிளாஸ்டிக் உற்பத்திகளின் கேள்வியை குறைப்பதனால், பாரிய சூழல் மாசடைவை தவிர்க்க முடியும் : கலாநிதி ஆஷா டி வோஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

பிளாஸ்டிக் உற்பத்திகளின் கேள்வியை குறைப்பதனால், பாரிய சூழல் மாசடைவை தவிர்க்க முடியும் : கலாநிதி ஆஷா டி வோஸ்

(நா.தனுஜா)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறியுள்ள பெருமளவான பிளாஸ்டிக் துணிக்கைகளால் கடல் வெகுவாக மாசடைந்திருப்பதுடன் பல்வேறு சூழலியல் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த பிளாஸ்டிக் துணிக்கைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான கேள்வியைப் படிப்படியாகக் குறைப்பதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய பாரிய சூழல் மாசடைவு அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று ஓஷன்ஸ் வெல் அமைப்பின் ஸ்தாபகரும் கடலியல் விஞ்ஞானியுமான கலாநிதி ஆஷா டி வோஸ் தெரிவித்துள்ளார்.

ஆஷா டி வோஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் காணொளியொன்றை வெளியிட்டிருக்கிறார். 

அந்தக் காணொளியின் ஊடாக அவர் மேலும் கூறியிருப்பதாவது நான் இப்போது பமுனுகம கடற்கரையில் இருக்கின்றேன். இந்தக் கடற்கரை எவ்வாறு கசிவுகளாலும் பிளாஸ்டிக் துணிக்கைகளாலும் மூடப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் காணொளியின் ஊடாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறதென்றார். 

இந்தக் கடற்கரைப் பகுதியின் நிலையைக் காண்பிக்கும் விதமாக அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்களை விடவும் அதன் நிலை நேரில் மிகவும் மோசமானதாக இருக்கின்றது. 

இதனைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் இந்தக் கடற்கரையில் மாத்திரம் சுமார் 350 கடற்படைவீரர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் குப்பைகளை இடுகின்ற சுமார் 3000 பைகளில் அந்தப் பிளாஸ்டிக் துணிக்கைகளை சேகரித்து வருகின்றார்கள்.

எக்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறியிருக்கும் சிறிய பிளாஸ்டிக் துணிக்கைகள் பெரிய பிளாஸ்டிக் பொருட்களையும் பிளாஸ்டிக் பைகளையும் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படுபவை ஆகும். 

கொரோனா வைரஸ் பரவலுடன் நாடு முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய செய்திகளால் மக்கள் பெருமளவு அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

எனவே எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்கு ஒவ்வொரு தனிநபரும் தம்மால் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்த பிளாஸ்டிக் துணிக்கைகளைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதனைப் இலங்கைக்கான கனேடியத்தூதுவர் டேவிட் மெக்கினொன், மீள்பதிவொன்றின் மூலம் பாராட்டியுள்ளார்.

No comments:

Post a Comment