தீ விபத்திற்குள்ளான கப்பலில் 800 க்கும் அதிக கொள்கலன்களில் பொலித்தீன் ; முழுமையாக மூழ்கினால் கடலில் கலக்கும் அபாயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

தீ விபத்திற்குள்ளான கப்பலில் 800 க்கும் அதிக கொள்கலன்களில் பொலித்தீன் ; முழுமையாக மூழ்கினால் கடலில் கலக்கும் அபாயம்

(எம்.மனோசித்ரா)

தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் காணப்பட்ட சுமார் 800 இற்கும் அதிக கொள்கலன்களில் பொலித்தீன்கள் காணப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் அதனை உறுதியாகக்கூற முடியாது. கப்பல் முழுமையாக மூழ்கினால் கொள்கலன்கள் வெடித்து அதிலுள்ள பொலித்தீன்கள் கடலில் கலக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திட்ட பணிப்பாளர் அநுர சதுருசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் காணப்பட்ட 34 கொள்கலன்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் எடை 40 மெட்ரிக் தொன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். எனினும் கப்பல் முழுமையாக மூழ்கினால் தற்போது அதில் உள்ள கொள்கலன்கள் வெடித்து அதிலுள்ள பொருட்கள் கடலில் கலக்கக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.

இதுவரையில் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய குறித்த கொள்கலன்களில் பொத்தீன்களே அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது 1486 கொள்கலன்களில் 800 இற்கும் அதிகமானவற்றில் பொத்தீன்களே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் தற்போது இல்லை.

கப்பல் மூழ்காமலிருந்தால் எமது குழுவினரை அனுப்பி அதிலுள்ள விடயங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க முடியும். எனினும் தற்போது கப்பல் மூழ்கும் நிலையிலுள்ளதால் அதனை செய்ய முடியாது. 

எவ்வாறிருப்பினும் மத்திய சுற்றாடல் அதிகார சபை, முப்படை, கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் என்பவை குறித்த கப்பலிலிருந்து வெளியாகக் கூடிய இரசாயனங்களிலிருந்து கடற்பரப்பினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளன.

இதுவரையில் கடலில் கலந்துள்ள எந்தவொரு பொருட்களும் நிலப்பரப்பிற்குள் செல்ல இடமளிக்கப்படவில்லை. கடலில் கலந்த மற்றும் கரையொதுங்கிய பொருட்களை சேகரிக்கப்பட்ட களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. 

தேவையயேற்படின் எதிர்வரும் தினங்களில் இவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சமர்ப்பிப்பதற்கும், அதனையடுத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கமைய இவற்றை எவ்வாறு அழிப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment